நெஞ்சம் பதறவில்லையா முதல்வரே? கமல் சரமாரி கேள்வி!

38shares

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரமே தற்போது தமிழகத்தின் சமூக - அரசியல் அரங்கை அதிரச்செய்துகொண்டிருக்கிறது. சுமார் ஏழாண்டுகளுக்கும் மேலாக பள்ளி - கல்லூரி மாணவிகளை ஏமாற்றி தவறாக பயன்படுத்தி ஆபாச விடீயோக்கள் எடுத்து அவர்களை மிரட்டிக்கொண்டிருந்த ஒரு கும்பல் குறித்த செய்திகள் வெளியான தினம் முதலே தமிழகம் உட்சபட்ச கொதிநிலையை அடைந்துள்ளது.

பொள்ளாச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் என்ற விஷமிகள் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்களை நட்பாக பழகி தனியே வரவைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக எடுத்து அச்சுறுத்தி வந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. மேற்காண் நால்வரின் மீதும் குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. மேலும், இவர்களுக்கு ஆதரவாக ஆளும் தரப்பின் முக்கிய புள்ளிகள் சிலரும் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள மக்கள் நீதி மைய்யத்தின் தலைவர் கமல், "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக வெளியான காணொளியில் உள்ள பெண்ணின் அழுகுரலை கேட்ட எனக்கு கண்கள் மூடினால் அதே குரலே ஒலிக்கிறது. நெஞ்சு பதறுகிறது. ஓர் அரசியல் கட்சியின் தலைவராக அல்ல இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக உங்களிடம் கேட்கிறேன் இதையெல்லாம் கண்டபிறகும் நெஞ்சு பதறவில்லையா முதல்வரே.

டெல்லியில் நிர்பயா இத்தகைய கொடூர சம்பவத்திற்கு ஆளாக்கப்பட்டபோது முதல்வராக இருந்த ஜெயலலிதா பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூரங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றார். அவர் வழியில் நடக்கும் உங்கள் ஆட்சியில் புகாரளித்தவர்களின் பெயர்களை காவல்துறையே வெளியிடுகிறது. எதற்கும் ஓர் எல்லையுண்டு" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த விவகாரம் சுதந்திரமான, முழுமையான விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டுமென்ற குரல்கள் வலுவாக எழுந்துகொண்டிருக்கிற சூழலில், ஆளும் தரப்பின் முக்கிய புள்ளிகள் சிலர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர் சமூக நோக்கர்கள்.

இதையும் தவறாமல் படிங்க