பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்டோரின் பெயர்களை வெளிப்படுத்தியது ஏன்? நீதிமன்றம் கேள்வி!

32shares

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை காவல்துறையே வெளிப்படுத்தியது ஏன்? கேள்வியெழுப்பியுள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரமே தற்போது தமிழகத்தின் சமூக - அரசியல் அரங்கை அதிரச்செய்துகொண்டிருக்கிறது. சுமார் ஏழாண்டுகளுக்கும் மேலாக பள்ளி - கல்லூரி மாணவிகளை ஏமாற்றி தவறாக பயன்படுத்தி ஆபாச விடீயோக்கள் எடுத்து அவர்களை மிரட்டிக்கொண்டிருந்த ஒரு கும்பல் குறித்த செய்திகள் வெளியான தினம் முதலே தமிழகம் உட்சபட்ச கொதிநிலையை அடைந்துள்ளது.

கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் என்ற விஷமிகள் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்களை நட்பாக பழகி தனியே வரவைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக எடுத்து அச்சுறுத்தி வந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. மேற்காண் நால்வரின் மீதும் குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.

அதே சமயம், இந்த வழக்கினை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கோவை மாவட்ட காவல் ஆணையாளரும் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளிப்படுத்தியிருந்தார். இது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு ஒன்றினை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கினை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது ஏன்? அது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி தவறு என்று தெரியாதா? தண்டனைக்குரிய குற்றம் என தெரியாதா? என கேள்வியெழுப்பியுள்ளது.

மேலும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக புதிய அரசாணையை அரசு வெளியிட வேண்டும் ; அந்த சம்பவம் தொடர்பான எந்த ஓர் வீடியோ ; புகைப்பட காட்சிகளோ எவராலும் பகிரப்படாத அளவிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், மக்களிடத்திலும் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க