முகிலன் எங்கே? வெளியாகியது சிபிசிஐடி யின் அறிவிப்பு !

266shares

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த இவர், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பரபரப்பு தகவலை அளித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த வன்முறையில் பொதுமக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸ் உயர திகாரிகள்தான் வன்முறைக்கு காரணம் என்பது தொடர்பான ஆதாரங்களை முகிலன்வெளியிட்டார். இந்த ஆதாரங்களை வெளியிடுவதால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மறுநாள் எழும்பூரில் இருந்து மதுரைக்கு ரயிலில் சென்ற அவர், பாதி வழியில் மாயமான தாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். முகிலனை கண்டுபிடித்து தரக் கோரி தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு சார்பில் எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், சென்னை மாநகர காவல் ஆணையர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்ட எஸ்பிக்கள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில் முகிலன் மாயமான வழக்கை எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில், முகிலன் வழக்கமாக செல்லும் சிலரது வீடுகளுக்கு சென்றிருப்பது தெரியவந்தது. அவர்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், முகிலன் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை காணவில்லை என்று சிபிசிஐடி சார்பில் தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகே உள்ள காவல் நிலையத்திலோ, சிபிசிஐடி அலுவலகத்திலோ அல்லது 044-28513500 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க