இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பெண் ஊழியர் பரபரப்பு புகார்!

11shares

இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், தற்போதைய தலைமை நீதிபதியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக உச்ச நீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கும் புகார் ஒன்றை எழுதியுள்ளார்.

இதைத் தொடர்ந்து ரஞ்சன் கோகாய் தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அவசர விசாரணை ஒன்றை நடத்தியது. இந்த அமர்வில் தலைமை நீதிபதியோடு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

அப்போது தம் மீதான புகார்களை மறுத்த ரஞ்சன் கோகாய், நீதித்துறையின் சுதந்திரம் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், நீதித்துறை பலிக்கடா ஆகக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

அந்தப் பெண் அளித்துள்ள புகார் தொடர்பாக தாம் எதுவும் விசாரிக்கப் போவதில்லை, பிற மூத்த நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்று ரஞ்சன் கோகாய் கூறியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்குப் பின்னால் சதி இருப்பதாகவும், தலைமை நீதிபதியின் அலுவலகம் செயல்படுவதை முடக்கும் நோக்கத்துடன் இதன் பின்னால் பெரும் சக்திகள் உள்ளதாகவும் கூறினார்.

"20 ஆண்டுகள் நீதிபதியாக இருந்தபின் என் வங்கிக்கணக்கில் 6.80 லட்சம் ரூபாய்தான் உள்ளது. என் அலுவலக உதவியாளரிடம்கூட அதிக பணம் உள்ளது, " என்று அப்போது கோகாய் குறிப்பிட்டார்.

பணம் மூலம் தம்மை யாராலும் வளைக்க முடியாது என்பதால் இப்படி ஒரு புகார் தம் மீது கூறப்படுவதாக கோகாய் கூறியுள்ளார் என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

புகார் கூறியுள்ள பெண் மீது இரு குற்ற வழக்குகள் இருப்பதாக ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்காத உச்ச நீதிமன்றம், நீதித்துறையின் சுதந்திரத்தைக் காக்க ஊடகங்கள் சற்று கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது என ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பதிவு ஒன்று தெரிவிக்கிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சொலிஸிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, இது ஒரு முக்கியமான சம்பவம், என்றும் இது பேசப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க