உயிரிழந்த தாயின் உடலை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்த மகனின் செயலால் அதிர்ச்சி!

56shares

உயிரிழந்த தனது தாயின் உடலை குப்பைத்தொட்டியில் வீசிய மகனின் செயல், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள தனசேகரன் நகர் பகுதியில் மாநகராட்சியின் குப்பைத் தொட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தரப்பினரும் தங்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இவற்றை துப்புரவு தொழிலாளர்கள் அவ்வப்போது சேகரித்து, ஊருக்கு ஒதுக்குப்புறமாக அப்புறப்படுத்தி வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று அதிகாலை வழக்கம் போல், துப்புரவு தொழிலாளர்கள் தனசேகரன் நகர் பகுதியில் இருந்த குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, குப்பைத் தொட்டிக்கு அருகே கழிவுகள் சிதறிக் கிடந்தன.

அதற்கிடையில் பெண்ணின் சடலமான்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் உடலை மீட்டு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது யாருடைய உடல் என்று பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இறந்து கிடந்தவரின் பெயர் வசந்தி(50). இவருடைய கணவர் நாராயணசாமி. இவர்களுக்கு முத்துலட்சுமணன்(29) என்ற மகன் இருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நாராயணசாமி சென்னைக்கு சென்றுள்ளார். அப்போது முதல் அங்குள்ள ஆசிரமத்தில் தஞ்சமடைந்துள்ளார். இதனால் வசந்தி, முத்துலட்சுமணன் ஆகியோர் மட்டும் வசித்து வந்துள்ளனர்.

முத்துலட்சுமணன் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். ஆனால் போதிய வருமானம் இல்லை. கடந்த சில நாட்களாக வசந்தி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

ஆனால் அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய போதிய பணம் இல்லை. இதனால் செய்வதறியாது திகைத்து நின்றார். இதையடுத்து தனது வீட்டின் அருகே இருந்த குப்பைத் தொட்டியில் தாயின் உடலை வீசியுள்ளார்.

ஏனெனில் அங்கு வரும் துப்புரவு ஊழியர்கள் அந்த சடலத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்துவிடுவர் என்று நம்பியுள்ளார். இதனை அறிந்த பொலிசார், வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அப்பகுதி மக்களின் உதவியுடன், தனது தாயின் உடலை அவர் அடக்கம் செய்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க