இந்தியா எப்போதும் போருக்குத் தயாராகவே உள்ளதாக இந்திய உள்விவிகார அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அண்மையில் சீனாவின் தென் பிராந்தியத்தில் உள்ள குவாங்டொங் மாகாணத்திலுள்ள இராணுவ படைத்தளத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ஷி ஜின்பிங், யுத்தத்திற்கு தயாராக இருக்குமாறும் முழுமையான விசுவாசம், நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதே நாட்டிற்கு தேவையாக உள்ளதாகவும் இராணுவத்தினர் மத்தியில் கூறியிருந்தார்.
சீன ஜனாதிபதியின் இந்தக் கருத்துக் குறித்து இந்திய உள்விவகார அமைச்சர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே இதனை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,
நாட்டின் ஒரு அங்குலத்தைக் கூட சீனாவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம். சீன ஜனாதிபதியின் கருத்துக்குப் பதிலாக இதனைக் கூறவில்லை எனினும் இந்தியப் பாதுகாப்பு படையினர் எப்போதும் எதற்கும் தயாராகவே உள்ளனர் என்பதையே கூறுகிறேன்.
அனைத்து நாடுகளும் போருக்குத் தயாராகவே உள்ளதுடன், அனைத்து வகையான எதிர்ப்புக்கும் பதில் அளிக்கும் வகையிலேயே தத்தமது இராணுவத்தை அந்தந்த நாடுகள் பராமரித்து வருகின்றன.
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெற்று வருவதுடன், அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்புகளும் திறந்தே உள்ளது.
இருப்பினும் இந்தியாவின் உள்துறை அமைச்சராக சீன ஜனாதிபதியின் கருத்துக்கு பதில் அளிப்பது உகந்ததாக இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்திய - சீனாவுக்கு இடையை எல்லைப் பிரச்சினை கடந்த ஆறு மாதங்களாக நீடித்துவரும் நிலையில், அமெரிக்கா மற்றும் தாய்வானுக்கு இடையிலான பிரச்சினையும் தற்போது தலைதூக்கியுள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே யுத்தத்திற்கு தயாராக இருக்குமாறு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், தமது நாட்டு இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.