ஆயிரம் ரூபா சம்பளம், தீர்மானமின்றி முடிவடைந்த பேச்சுவார்த்தை!

9shares

இலங்கையின் மலையகப் பகுதிகளில் சம்பள உயர்வு கோரி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்ற நிலையில், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதியுடன் அமுலில் உள்ள கூட்டு ஒப்பந்தம் நிறைவுக்கு வரவுள்ள நிலையிலேயே சம்பள உயர்வு தொடர்பான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையும் நேற்றைய தினம் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

பெருந்தோட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான முக்கியகட்டப் பேச்சு கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள முதலாளிமார் சம்மேளனத்தின் தலைமையகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

வழமைபோல மூடிய அறையில் சுமார் 30 நிமிடங்கள் நடத்தப்பட்ட இந்தப் பேச்சில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமகன் தொண்டமான், பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மற்றும் கூட்டுக்கமிட்டியின் சார்பில் இராமநாதனும் கலந்துகொண்டிருந்தனர்.

பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான், பேச்சுவார்த்தை எவ்வித இணக்கமும் இன்றி வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதேவேளை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளரான ரொஷான் இராஜதுரை, பேச்சு இணக்கப்பாடின்றி முடிவடைந்த போதிலும் அடுத்த பேச்சுவார்த்தைக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் கருத்தை பொய்யாக்கினார்.

‘இன்றைய பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி முடிவடைந்தது. தேயிலை சந்தையில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையினால் ஆயிரம் ரூபாவை அடிப்படைச் சம்பளமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கமுடியாது. எனினும் தற்போது வழங்குகின்ற 500 ரூபாவை 575 ரூபாவாக உயர்த்தி மொத்தமாக 936 ரூபாவை நாளாந்த சம்பளமாக வழங்க பரிந்துரைத்தோம்.

அதற்கும் அவர்கள் இணங்கவில்லை. இந்த சம்பளம் எப்படியும் தொழிலாளர்களுக்கு போதுமானதாக அமையாது. எனினும் உயர்வான சம்பளத்தை வழங்க முடியாத நிலைக்கான காரணம், இன்று தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடிகளாகும். வெள்ளிக்கிழமை எந்தப் பேச்சுக்கும் இணங்கவில்லை. அடுத்த பேச்சுக்கான திகதி இன்னும் தீர்மானிக்கவில்லை” என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
`