இந்து விவகார பிரதி அமைச்சர் பதவியை துறந்தார் காதர் மஸ்தான்

606shares

ஸ்ரீலங்காவின் இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் இன்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பையடுத்தே இந்து சமய விவகார பிரதி அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான கே.கே.மஸ்தான் ஐ.பீ.சி தமிழுக்குத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவினால் யூன் 12 ஆம் திகதி ஐந்து பிரதி அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்கள் இருவரும் நியமிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவரான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது.

இதற்கு இந்து அமைப்புக்கள், மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் மனோ கணேசன், ஆளும் கூடடணிக் கட்சிகளின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என தமிழர் தரப்பினால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், வடக்கு கிழக்கில் மாத்திரமன்றி கொழும்பிலும் இந்து அல்லாத ஒருவரை இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சராகராக நியமித்ததற்கு எதிராக போராட்டங்களும் வெடித்தன.

முஸ்லீம் இனத்தவரான காதர் மஸ்தானை இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சராக நியமித்ததன் மூலம் ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்ரிபாலவும், அவரது அரசாங்கமும் இந்து மக்களின் மனங்களை காயப்படுத்தியுள்ளதாகவும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், அரச தலைவருமான மைத்ரிபால சிறிசேனவுடன் இன்றைய தினம் அவசரமாக சந்தித்து ஏற்பட்டுள்ள நிலமைகள் குறித்து கலந்துரையாடியதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா அரச தலைவருடனான சந்திப்பின் போது இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சர் பதவியை பெற்ற பின் ஏற்பட்டுள்ள நிலமை தொடர்பில் கலந்துரையாடியதாகவும், அரசியல் நோக்கம் கருதி திட்டமிட்டு தனக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியதாகவும் பிரதி அமைச்சர் மஸ்தான் கூறினார்.

எவ்வாறாயினும் மதங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவும், பொது அமைப்புக்கள் சில கேட்டுக் கொண்டதற்கு இணங்கவும் தானாக முன்வந்து இந்து விவகார பிரதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக அரச தலைவரிடம் அறிவித்து அதற்கமைய குறித்த பதவியிலிருந்து விலகியுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் மஸ்தான், ஏனைய அமைச்சுக்களின் பிரதி அமைச்சராக தொடர்ந்தும் செயற்படுவேன் என்றும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க