ரஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய ஏழு தமிழர்கள் குறித்து மஹிந்த வெளியிட்ட கருத்து!

260shares

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை குறித்து இந்தியா தான் முடிவெடுக்க வேண்டும் என ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்

அத்துடன் ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய 7 பேரினதும் விடுதலைக்கு அகில இந்திய காங்கிரஸ் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரொபேர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும் நளினி உள்ளிட்ட ஏனைய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பிய நிலையில் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன் அவர்களை் 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு உரிய முடிவு எடுக்கலாம் எனவும் தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மாத்திரமன்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரொபேர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது.

தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து அதன்போது மத்திய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, உச்ச நீதிமன்றத்தில் 'ரிட்' மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ராஜூவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க முழு அதிகாரம் உள்ளது என தீர்ப்பளித்துள்ளது.

அவர்களின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியது.

இதனையடுத்து தமிழக அமைச்சரவையில், ராஜிவ் கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

எனினும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரையும் விடுதலைக்கு அகில இந்திய காங்கிரஸ் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது

இந்நிலையில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றவர்களை விடுவிப்பது குறித்து இந்திய அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கருத்து வெளியிட்டுள்ளார்

புதுடெல்லிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர் அந்நாட்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

இந்த விடயத்தில் தம்மால் எந்த கருத்தையும் வெளியிடமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இதையும் தவறாமல் படிங்க