மஹிந்த தலைமையில் ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பான முக்கிய சந்திப்பு!

32shares

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினர், தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் கொண்ட அணியை சந்தித்து பேசவுள்ளனர்.

இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்கள் நேற்று முன்தினம் மாலை சந்தித்து பேசியிருந்த நிலையில், இதன் தொடர்ச்சியாக இன்றைய சந்திப்பு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஷெகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்காத ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்களுடன், பேராசிரியர் ஜி.எல்.பீரிசின் இல்லத்தில் சந்திப்பொன்றை மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 44 உறுப்பினர்கள் பங்கேற்றதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, உள்ளிட்டவர்கள் பங்கேற்கவில்லை.

இதேவேளை, இடைக்கால மேற்பார்வை அரசாங்கம் ஒன்றை அமைக்கும் திட்டத்துக்கு, ஒன்றிணைந்த எதிரணியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் நடைபெற்ற கூட்டத்தின்போது, கிராமப் புறங்களில் வாழும் மக்கள் மத்தியில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கடும் எதிர்ப்பு உள்ளதாகவும், இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

அத்துடன், இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, இடைக்கால அரசாங்கமொன்று அமைக்கப்பட்டால் தான் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்வேன் என, கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களான மகிந்தானந்த அளுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல ஆகியோர் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் யோசனைக்கு ஆதரவு வெளியிட்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ரொமேஷ் பத்திரன, ஷெகான் சேனசிங்க, ரொஷான் ரணசிங்க ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் சகலரும் இணங்கினால் மாத்திரமே, இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என்று மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இந்த நிலையிலேயே இன்றைய தினம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
`