தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும், அபிலாசைகளையும் தகர்த்த நல்லாட்சி! சம்பந்தனின் தீபாவளிக்கும் வேட்டு!

46shares

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வை ஓரளவு பூர்த்தி செய்யும் என எதிர்பார்ப்பு வழங்கிய புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள் மீது காணப்பட்ட நம்பிக்கையை தமிழர் தரப்பு இழந்துவரும் நிலையில், புதிய அரசியலமைப்பு இந்த ஆட்சியில் நிறைவேற்றப்படாது என்று ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகரான சிரால் லக்திலக்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாக புதிய அரசியலமைப்பு பூரணப்படுத்தப்பட்டு தீர்வு வழங்கப்பட்டு விடும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுவரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து செயற்பட்டுவரும் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் ஆசிரியர்களுக்கான சந்திப்பொன்று ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகரான சட்டத்தரணி சிரால் லக்திலக்க தலைமையில் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள பிரபல விடுதி ஒன்றில் அண்மையில் நடைபெற்றது.

இதன்போது தமிழர் தரப்பில் காணப்படுகின்ற சந்தேகங்களுக்கான பதிலை சட்டத்தரணி சிரால் லக்திலக்க அளிக்கத் தொடங்கினார்.

இதனிடையே ஐ.பி.சி தமிழ் செய்திப் பிரிவு சார்பாக புதிய அரசியலமைப்பு பற்றிய கேள்வி முன்வைக்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு ஜனவரி ஆட்சிக்குவந்த அரசாங்கம் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்ததோடு புதிய அரசியலமைப்பு ஊடாக புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கும் தீர்வை வழங்குவதாகவும் உறுதியளித்தது.

இதற்காக ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் அரசியலமைப்புச் சபையாக மாற்றியமைக்கப்பட்டதோடு வழிநடத்தல் குழு என்பனவும் அமைக்கப்பட்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கல் தொடர்பாக மக்களிடம் கருத்தறிவதற்காக சட்டத்தரணி லால் விஜேநாயக்க தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் அடுத்த ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவருகின்ற நிலையிலும் புதிய அரசியலமைப்புக்கு எதிராக மஹிந்த அணியினரும் கடும்போக்குவாத அமைப்புக்களும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்ற நிலையிலும் புதிய அரசியலமைப்புக்கான தருணம் இதுவல்ல என்ற அறிவிப்பை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில் புதிய அரசியலமைப்பு சாத்தியமாகுமா? என சட்டத்தரணி சிரால் லக்திலக்கவிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதியின் ஆலோசகர், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் புதிய அரசியலமைப்பானது முடிவுறுத்தப்படாது என்று பதிலளித்தார்.

தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக குறிப்பிட்ட அவர், புதிய அரசியலமைப்பு இந்த ஆட்சியில் வராது என்றும் தெரிவித்தார்.

2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தீபாவளி பண்டிகையின்போது அலரிமாளிகையில் ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் உரையாற்றியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அடுத்த தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வு வழங்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கைதரும் அறிவிப்பை விடுத்திருந்தார்.

இதுதவிர, இந்த வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கற் பணிகள் நிறைவு பெற்று விடும் என்ற அறிவிப்பை ஐக்கிய தேசியக் கட்சியும் அதேபோல ஸ்ரீலங்கா அரசின் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்னவும் விடுத்திருந்தனர்.

மேலும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த இரா. சம்பந்தன், தமிழர் பிரச்சினைக்கு தீர்வு தரும் விடயத்தில் ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மீது அதீத நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே ஜனாதிபதியின் ஆலோசகர் சிரால் லக்திலக்க புதிய அரசியலமைப்பு மீதான நம்பிக்கையை இழக்கும் வகையிலான கருத்தை முன்வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க