ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டம் தொடர்பாக மஹிந்தவாதிகளின் கருத்து!

11shares

இலங்கையில் ஆட்சிக் கவிழ்ப்பு இடம் பெற்றால் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையத் தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் ஆட்சிக் கவிழ்ப்பு சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்கள் இதுகுறித்து பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜகபக்ஷவின் இல்லத்தில், ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்கள் நேற்று பிற்பகல் சந்தித்து கலந்துந்துரையாடலொன்றை நடத்தியிருந்தனர்.

இந்தக் கலந்துரையாடலானது நேற்று இரவு வரை தொடர்ந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்னாயக்க, இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க முற்படுவதாக தெரிவிக்க வேண்டாம் என்றும், இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஆட்சியில் உள்ள அரசாங்கம் பதவி விலகியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிரணியில் உள்ள தமக்கு அரசாங்கமொன்றை அமைப்பதே நோக்கம் என்றும், அதற்காக தாம் தயாராக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியுடனான மற்றும் கூட்டரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சி நீங்கினால் மாத்திரமே இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்க முடியும் என, நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவ்வாறான நிலையொன்று ஏற்படாமல் இடைக்கால அரசாங்கம் குறித்து பேசுவதால் எந்த பயனும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஹாலி எல பகுதியில் வைத்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இல்லாத அரசாங்கம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என, தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இதுவரை எந்தப் பேச்சுக்களும் நடத்தப்படவில்லை என்று ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு - அபயராமயவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் நேற்று இதனை கூறியுள்ளார்

இதையும் தவறாமல் படிங்க