புதிய நீதியரசர் யார்? ஜனாதிபதி பரிந்துரை!

21shares

ஸ்ரீலங்காவின் 46ஆவது பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் நளின் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அனுமதியை ஸ்ரீலங்காவின் அரசியலமைப்பு பேரவை இன்று வழங்கியுள்ளது.

ஸ்ரீலங்காவின் 45ஆவது பிரதம நீதியரசராக கடமையாற்றிய பிரியசாத் டெப்பின் பதவிக்காலம் நிறைவுக்கு வந்தநிலையில்,இன்றைய தினம் அவர் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் 02ஆம் திகதி பிரதம நீதியரசராக பதவியேற்ற பிரியசாத் டெப், நீதித் துறையில் சுமார் 40 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார். 1978ஆம் ஆண்டு சட்ட மா அதிபர் திணைக்களத்தில் பணியில் இணைந்த பிரியசாத் டெப், 1996ஆம் ஆண்டு அரச மேலதிகசொலிசிஸ்டர் ஜெனரலாக நியமனம் பெற்றதுடன், 2007ஆம் ஆண்டு அரச சொலிசிஸ்டர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார். அதனையடுத்து, 2011ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவின் உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்ட பிரியசாத் டெப், கடந்த வருடம் பிரதமநீதியரசராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்றுடன் பிரதமர் நீதியரசர் பிரியசாத் டெப் ஓய்வுப்பெற்ற நிலையில், புதிய பிரதம நீதியரசரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் நளின் பெரேராவின் பெயரை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரை செய்திருந்தார்.

அத்துடன், குறித்த பரிந்துரை அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து, அரசியலமைப்பு சபை இன்று மதியம் 12 மணியளவில் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் கூடியது.

இதன்போது, ஜனாதிபதியின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட அரசியலமைப்பு சபை, பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் நளின் பெரேராவை நியமிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ள நளின் பெரேரா, நீதித்துறையில் 39 வருடங்கள் கடமையாற்றியுள்ளதுடன், கடந்த 2016ஆம்ஆண்டு உயர் நீதிமன்ற நீதியரசராக நியமனம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க