ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மீண்டும் காலஅவகாசம்! பொறியா?...நல்லிணக்கப்பொறிமுறையா?

  • Prem
  • February 13, 2019
20shares

அரண்மனை ஆயிரம் சொல்லும் குடியானவன் என்ன செய்வான் என ஒரு பழமொழி இருக்கிறதல்லவா? அதுபோலவே ஐ. நா மனித உரிமைபேரவையில்; சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கப்படக்கூடாது என நீதிகிட்டாத தமிழ்மக்கள் தலையில் அடித்துக் கதறினாலும் சீறினாலும் ஆயிரம் சொல்லும் அரண்மனைப்போல ஐ.நா மனித உரிமைபேரவையில் அடுத்தமாதம் சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கப்படுமென்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை மனித உரிமைபேரவையின் பிரித்தானிய பிரதிநிதி யூலியன் பிறெயித்வெயித் Julian Braithwaite உறுதிப்படுத்தியிருக்கிறார்.

கடந்த 2015 இல் இடம்பெற்றதைப்போல இந்தமுறையும் இலங்கை தொடர்பான இந்த நகர்வை “கோர் குறூப்”( Core Group)என அடையாளப்படுத்தப்படும் 5 நாடுகளின் கூட்டணி தான் நகர்த்தவுள்ளது.

பிரித்தானியாவுடன் இணைந்து கனடா ஜேர்மனி மசிடோனியா மொன்ரநீக்ரோ ஆகிய நாடுகள் நகர்த்தவுள்ள இந்தப்பொறியில், மன்னிக்கவும் பொறி முறையில் இன்னொரு ஏகமனது தீர்மானம் வரும் என்பதை பிரித்தானிய பிரதிநிதி சூசகம் காட்டியுள்ளார்.

ஐ.நா உரிமைபேரவையில் இருந்து ஏற்கனவே அமெரிக்கா விலகியுள்ளதால் இந்தமுறை இலங்கைதொடர்பான பிரதான இழுவை இயந்திரமாக பிரித்தானியாவே பணியாற்றப்போகின்றது.

எது எப்படியோ 2017இல் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட 2 வருடகால அவகாசம் இந்தவருடத்தின் மார்ச்மாதத்துடன் முடிவடைவதால் என்ன நடக்கும் என்ற வினாவுக்கு இப்போது விடை கிட்டிவிட்டது.

ஆயினும் இந்த நிலைமையை நன்றாக அறிந்துள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஐ.நா மனிதஉரிமைப்பேரவைக்கூட்டத்தொடரைமையப்படுத்தி மேற்குலக இராஜதந்திரிகளுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளதான ஒரு தந்திரோபாயத்தை நகர்த்தியுள்ளது.

அதனடிப்படையில் சிறிலங்காவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவுக்கும்; இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் குழுவுக்குமிடையில் இந்தப்பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன

இந்தப்பேச்சுக்களின் போது மனிதஉரிமைபேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்ளை நடைமுறைப்படுத்த வழங்கப்படவேணடிய அவசரமான அழுத்தங்கள் குறித்து ஆராயப்படும் என்றும் கூறப்பட்டது

ஆனால் யதார்த்தமாக நோக்கினால் இது ஒரு தந்ரோபாயச்செய்தி மட்டுமே! ஏனெனில் இலங்கை குறித்த முடிவை எடுத்துவிட்டோம் என்பதான் சூசகச்செய்தியை ஜெனிவாவில் இருந்து பிரித்தானிய பிரதிநிதி யூலியன் பிறெயித்வெயித் வழங்கிவிட்டார்.

இதனை இன்னமும் உருப்பெருக்கினால் Transitional justicemechanism எனப்படும் நிலைமாற்றகாலநீதிப்பொறி ஊடாக சில கடப்பாடுகளை நிறைவேற்றிக்கொள்ள இன்னும் காலத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்ற செய்தியே அடுத்தமாதம் ஜெனிவா அரங்கில் வரப்போகின்றது

இதற்கிடையே இந்தவருடம் இலங்கைக்கு தேர்தல்ஆண்டாக அமைவதால் தமிழ்மக்கள் மீதான உதிரப்பழிக்குரிய பொறுப்புக்கூறல் நகர்வுகளை செய்ய ரணிலின் அரசாங்கம் முன்வராதென்பதும் யதார்த்தம்.

சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கப்படக்கூடாது என்பதையும் அவ்வாறு காலஅவகாசம் வழங்கப்படும் நகர்வை ஆதரிக்கும் சுமந்திரன் போன்றவர்களிடம் நீதிகிட்டாத தமிழ்மக்கள் சீற்றம்காட்டுகின்றனர்.

இது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிடமிருந்து இல்லையென்றால் காணிமீட்புக்காக போராடும் மக்களிடமிருந்து வெளிப்படுகிறது.

சிறிலங்காவுக்கு மீண்டும்காலஅவகாசம்வழங்கும்நகர்வானது, தமிழ்மக்களிடம் எஞ்சியுள்ளசாட்சிகளை இல்லாதொழிக்கும்நகர்வென கனகரட்ணம் சுகாஸ் போன்ற மனிதஉரிமைசெயற்பாட்டாளரும்; விசனப்படுகின்றனர்

இதேபோலவே 2017 இல் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இரண்டுவருடகால அவகாசம் வழங்கப்ட்டபோதும் வீதியோரத்தில்தான் இருந்தோம் இப்போதும் வீதியோரத்தில்தான் இருக்கின்றோம் என கேப்பாபுலவு காணிமீட்புப்போராட்டத்தை முன்னெடுக்கும் மக்களும் விசனப்படுகின்றனர். உள்ளுரில்

இவ்வாறாக குரல்கள் கிளம்ப அனைத்துலக அரங்கில் இருந்தும் சில விசனங்கள் கிளம்பியுள்ளன. நிலைமாற்றகாலநீதிப்பொறிமுறையூடாக இதுவரை நிறைவேற்ற்பபட்ட வாக்குறுதிகள் குறித்தஒருகாலஅட்டவணையை காட்டுங்கள்பார்க்கலாமென மனிதஉரிமைகண்காணிப்பகம் போன்ற அனைத்துலக அமைப்புகள் வெளிப்படையாக கோரியுள்ளன.

ஆகமொத்தம் போர்முடிவடைந்து 10 ஆண்டுகள் முடிவடையும் நிலையில் இப்போதும் நிலைமாற்றகால நீதிப்பொறி முறைதான் வித்தைகாட்டிவருகின்றது.

ஆனால் இன்றுவரை தமிழ்மக்கள் மீதான உதிரப்பழிக்குரிய பொறுப்புக்கூறலின் அடிப்படையில் யாருக்கும் கிடுக்கிப்பிடி போட்டப்படவில்லை. அவ்வாறாக கிடுக்கிப்பிடி போடப்படும் என்ற நம்பிக்கைகளும் இதுவரையில்லை.

எனினும் ஐ.நா மனித உரிமைபேரவையில் அடுத்தமாதம் சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கப்படுவது உறுதிப்படுதப்படுகிறது அவ்வாறாயின் Reconciliation எனப்படும் நல்லிணக்கம் என்பது யாது?

Transitional justice எனப்படும் நிலைமாற்றகாலநீதியின் கருப்பொருள் என்ன? இந்த கேள்விகள் பின்னணியில் ஒரேயொரு விடயத்தை மட்டும் இப்பொதைக்குபு சொல்லலாம் ஜெனிவாபோன்ற அரண்மனை ஆயிரம் சொல்லும் ஆனால் தமிழ் குடியானவர்கள் என்ன செய்வார்கள்?

இதையும் தவறாமல் படிங்க