3 இல் பதவிதுறப்பு…19 இல்ஏற்பு ஆனால் சாதித்தது என்ன?

  • Prem
  • June 20, 2019
135shares

எட்டினால் குடுமியைப்பிடி எட்டாவிட்டால் காலைப்பிடி என்பார்கள். இந்தப் பழமொழியை போல முஸ்லிம் அரசியல் தலைகளான கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகிய இருவரின் பதவியேற்பு ஹைலைற் செய்திகள் வந்தன.

கடந்த 3ஆம் திகதியன்று தமது பதவி விலகல்களின் மூலம் அரசாங்கத்தின் குடுமியை முஸ்லிம் அமைச்சர்கள் பிடிக்க முனைந்தனர். ஆனால் அந்தப்பிடி முறையாக எட்டவில்லை என்பதால், இப்போது எட்டாவிட்டால் காலைப்பிடி தந்ரோபாயம் வந்துவிட்டது.

கூட்டிக்கழித்துப்பார்த்தால் அத்துரலிய ரத்ன தேரர், அண்மையில் கண்டியில் நடத்திய உண்ணாநிலைப்போராட்ட அரங்கக்காட்சிக்கு சளைக்காத அரங்ககக்காட்சியாகவே இதுதெரிகிறது.

ஆகமொத்தம் 3 ஆந்திகதி பதவி துறப்பு. 19 ஆந்திகதி பதவி ஏற்பு என நகர்த்தப்பட்ட இந்த வியூகத்தில் முஸ்லிம்களுக்குரிய அரசியல் நன்மைகள் தான் என்ன?

எது எப்படியோ, யானை முகாமான ஐக்கிய தேசிய கட்சியில் அரசியல் சவாரி செய்யும் கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் தமக்குரிய பழைய அமைச்சுக்களுக்குரிய அமைச்சர்கள் அரிதார பூசலை செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் மீண்டும் தத்தமது அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுக்கொள்ள முஸ்லிம் கூட்டுத்தலைமை அங்கீகாரம் வழங்கியதான வியாக்கியானமும்உள்ளது.

கடந்த 18 ஆந்திகதி இடம்பெற்ற முஸ்லிம் கூட்டுத்தலைமையின் சந்திப்பில் முன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவருமே மீண்டும்இந்நாள் அமைச்சர்களாக மாறும் வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன..

அதனடிப்படையில் யானையிலுள்ள முஸ்லிம் முகங்கள் அரியாசனம் ஏறியதைப்போலவே, விரைவில் ரவூப் ஹக்கீமின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முகங்களும் அதுபோலவே ரிஷாத் பதியுதீன்அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முகங்களும் பேஷாக தமது சாதகமான முடிவுகளை வெளிப்படுத்தி அமைச்சர்களாக அரிதாரம் எடுக்கக்கூடும்.

ஆனால் ஏற்கனவே கூறியது போல இதில் கிட்டிய அடைவுகள் இல்லையென்றால் முஸ்லிம்களுக்குரிய அரசியல் நன்மைகள் தான் என்ன? ரணிலின் அலரி மாளிகையில் வைத்து கூட்டாக தமது பதவி விலகல்களை அறிவித்தார்கள். ஏன் அறிவித்தார்கள்? இலங்கையில் ஐ. எஸ் கந்தக நாசகாரம் இடம்பெற்றபின்னர் அவ்வாறான நாசகாரத்துடன் அரசல் புரசலான தொடர்புகளை கொண்டிருந்ததான சுட்டுவிரல் நீட்டல்களுடன்

அப்போது கிழக்கு மாகாண ஆளுனராக இருந்த ஹிஸ்புல்லா , மேல் மாகாண ஆளுனராக இருந்த அசாத்சாலி, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகிய மூவரும் பதவி விலக வேண்டும் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆனால் அவ்வாறு இடம்பெறாததால் அதற்குப்பின்னரான ஒருகட்டத்தில்தான் அத்துரலிய ரத்ன தேரர் தசரதனை வழிக்கு கொண்டுவர முனைந்த கைகேயி பாணியிலான அரங்கக்காட்சியை தனது தலதா மாளிகை முன்றலில் ஆரம்பித்தார்

இந்தக்காட்சி விறுவிறுப்பானதும் ஹிஸ்புல்லா , அசாத்சாலி, ரிஷாத் பதியுதீன் ஆகிய முகங்கள் மீதான நடவடிக்கையை எடுக்கக்கோரி அரசாங்கத்துக்கு கடந்த 03ஆந்திகதி நண்பகல்வரை காலக்கெடு விதிக்கப்பட்டது.

இந்தக்காலக்கெடு தவறினால் இன்று இரவு திருவிழா தான் என எச்சரித்தார் ஞானசார தேரர்.

ஆனால் அரசாங்க நகர்வுகளோ கிணற்றில் போடப்பட்ட கல்லாக கிடந்தன.

நேரம் ஏற ஏற கண்டியில் பதற்றங்கள் எகிறின. அந்தவழியால் போன அப்பாவி முஸ்லிம்களும் தாக்கப்பட்டனர். இதன்பின்னர்தான் பதவிவிலகல் காட்சிகள் உதிரிகளாகவும், கூட்டாகவும் வந்தன.

ஆனால் அதன்பின்னர் குற்றச்சாட்டு முன்வைக்கப்படாத அமைச்சர்களும் ஏன் பதவிவிலகினார்கள் என்ற கேள்வி எழுந்தபோது முஸ்லிம்களின் ஒற்றுமைக்காக என பதிலளிக்கப்பட்டது.

இங்கு இன்னொரு விடயத்தையும் அவதானிக்கவேண்டும் பதவி விலகிய கபினட் தகுதிகளுக்குரிய பதிலீடுகள் எவையும் நிரப்பப்படாமல் ரணில் விக்ரமசிங்கவால் பாதுகாக்கப்பட்டன.

போனவர்கள் மீண்டும் அரியாசனம் ஏற வருவதற்காகவே அவை காத்திருப்பதான செய்திகளும்; நிலுவையில் இருந்தது.

இதற்கிடையேதான் சிங்களத்தின் பௌத்த மகாநாயக்க முகங்கள் இது குறித்த எதிர்வினைகளை முன்வைக்க அவர்களையும் ஒரு கட்டத்தில் கூட்டாக பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் சந்தித்தனர். தமது நிலைமைகளை விளக்கினர்

அப்போது பதவிகளை ஏற்றுக்கொள்ளுங்கள் என தேரர்கள் தோராயமாக கூற உள்ளுரப்புளுகத்துடன் திரும்பியவர்கள் இப்போது மீண்டும் பதவியேற்க தலைப்பட்டுள்ளனர். ஆகமொத்தம் மகிந்தவாதிகள் எக்காளப்பட்டது போலவே முஸ்லிம் அரசியல்வாதிகளின் பதவிவிலகல்கள் நாடகங்களாகவே அடையாளப்படுத்தப்பட்டதை இவர்களே இப்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.

இறுதியாக அந்தமேடையில் இந்த நாடகம் 16 நாட்கள் மட்டுமே என்ற செய்தியே வந்துள்ளது. இனியென்ன? எதிர்வரும் அரசதலைவர் தோ்தல் களத்தில் ரணில் தரப்பைப் பலப்படுத்துவோம். மகிந்த தரப்பை மூக்கறுப்போம் என்ற செய்திகளும் முஸ்லிம்களின் ஒற்றுமைக்காக பதவி விலகிய வீர புருசர்களான எமக்கு வாக்களியுங்கள் என்ற அடையாளம் மட்டுமே எஞ்சக்கூடும்.