நாவற்குழி கொடூரம் காலம் கடந்ததாம்: ஸ்ரீலங்கா இராணுவம்

194shares
Image

யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் 1996 ஆம் ஆண்டு 24 இளைஞா்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் காலம் கடந்தவை என்பதால் அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என இராணுவத்தினர் சார்பில் முன்னிலையாகிய சட்ட மா அதிபர் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

22 ஆண்டுகள் கடந்த இந்த சம்பவத்தை யாழ் நீதிமன்றில் விசாரிக்க முடியாது என்று இராணுவ அதிகாரி துமிந்த கெப்பிட்டிவெலான சார்பில் மன்றில் முன்னிலையான சட்ட மா அதிபர் திணைக்கள பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர, ஆரம்ப விசாரணையிலே இந்த மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

வழக்கில் இணைக்கப்பட்டுள்ள சான்று ஆவணம் ஒன்று போலியானது எனச் சுட்டிக்காட்டிய பிரதி மன்றாடியார் அதிபதி, 7 காரணங்களைக் குறிப்பிட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்ய விண்ணப்பம் செய்தார்.

ஆள்கொணர்வு மனுக்களின் பிரதிவாதிகள் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைக்கு மனுதாரர்கள் பதில் ஆட்சேபையை மன்றில் முன்வைக்க வரும் ஜூலை 11ஆம் திகதி தவணையிடப்பட்டு வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டன.

1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர் கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்களை பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் சட்டத்தரணிகள் கு.குருபரன் மற்றும் எஸ்.சுபாசினி ஆகியோர் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த நவம்பர் 9ஆம் திகதி 12 பேர் சார்பில் தனித்தனியே ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றில் 3 மனுக்களை மட்டும் மேல் நீதிமன்று ஏற்றுக்கொண்டது.

9 பேரின் மனுக்கள் 2002ஆம் ஆண்டு யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் யாழ்ப்பானத்தில் நடத்த கூடாது என அப்போதைய யாழ்.மாவட்ட இராணுவ தளபதி கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் 2003ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை அடுத்து , இந்த வழக்குகள் அக்கால பகுதியில் அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

வேறொரு மேல் நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் வழக்கொன்றை இன்னொரு மேல் நீதிமன்றில் மீள திறக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய யாழ்.மேல் .நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், 9 பேரின் ஆள்கொணர்வு மனுக்களைத் தள்ளுபடி செய்திருந்தார்.

மனுக்களில் 1ம் பிரதிவாதியாக துமிந்த கெப்பிட்டிவெலான 2ம் பிரதிவாதியாக இலங்கை இராணுவ தளபதி மற்றும் 3ம் பிரதிவாதியாக சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

சட்ட மா அதிபர் திணைக்கள பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர மேல் நீதிமன்றில் தோன்றினார்.

அவர்களுடன் அரச சட்டவாதிகள் நாகரட்ணம் நிஷாந்த்தும் முன்னிலையாகினர்.

மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகள் வி.திருக்குமரன், எஸ்.சுபாசினி ஆகியோர் முன்னிலையாகினர்.

இதையும் தவறாமல் படிங்க
`