சடலமாக கரையொதுங்கிய சகோதரர்கள் இவர்கள்தான்!

  • Shan
  • June 13, 2018
758shares

தலைமன்னார் கடற்பகுதியூடாக கடந்த வெள்ளிக்கிழமை காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்று காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான இரு மீனவர்கள் 5 நாட்களின் பின் இன்று புதன் கிழமை(13) மதியம் யாழ் புங்குடுத்தீவு கடற்கரையில் சடலங்களாக கரை ஒதுங்கியுள்ளதாக தெரிய வருகின்றது.

கடந்த வெள்ளிக் கிழமை (08) ஆம் திகதி தலைமன்னார் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தோமஸ் கிறிஸ்டியன் பூஞ்சன் (வயது -38), தோமஸ் ஆரோக்கிய எமில்டன் (வயது -32 ஆகிய இரு சகோதரர்களும் சம்பவம் அன்று காலை கடலில் போடப்பட்ட நண்டு வலையை கரை சேர்ப்பதற்காக படகு ஒன்றில் சென்றுள்ளனர்.

ஆனால் கடலுக்குச் சென்ற குறித்த இரு மீவர்களும் குறித்த நேரத்திற்கு கரை திரும்பாததினால் தலைமன்னார் மேற்கு மீனவ சமூகம் பத்து படகுகளில் நாற்பது மீனவர்கள் கடலில் தேடுதலை மேற்கொண்டனர்.

ஆனாலும் குறித்த மீனவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை.

இவர்களுடைய படகு இயந்திரம் பழுதடைந்திருந்தால் எங்காவது கரையொதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. குறிப்பாக வட கடலிலே இவர்கள் தொழிலை மேற்கொண்டதால் யாழ்ப்பாணம் அல்லது இந்திய கடல் பக்கமே கரை அடைந்திருக்க சாத்தியக் கூறுகள் இருப்பதாக சந்தேகித்து குறித்த பக்கம் நோக்கியும் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் குறித்த மீனவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் புங்குடுத்தீவு கடற்கரையில் சகோதரர்களான குறித்த இரு மீனவர்களும் 5 நாட்களின் பின் இன்று புதன் கிழமை (13) மதியம் சடலமாக கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இரு மீனவர்களுக்கும் நடுக் கடலில் என்ன நடந்தது என்பதுகுறித்த தகவல்கள் எதுவுமே கிடைக்காததால் மீனவர்கள் மத்தியில் ஒருவித பதட்ட நிலை காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க