காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடுவது ஒரு போலி நாடகம் - உறவினர்கள் ஆவேசம்

52shares
Image

சர்வதேச சமூகத்தையும், பாதிக்கப்பட்ட மக்களையும் ஏமாற்றுவதற்காகவே காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டு தமது எதிர்ப்பையும் மீறி இயங்க வைத்திருப்பதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ், OMP அலுவலகம் வெற்றிகரமாக செயற்பட வேண்டுமானால் அதற்கு ஆட்சியில் உள்ளவர்களின் முழமையான ஒத்துழைப்பு இருக்க வேண்டியது அவசியம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகம் இன்றைய தினம் திருகோணமலையில் நடத்திய சந்திப்பின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும், OMP அலுவலகத் தலைவரும் இந்தக் கருத்துக்களை ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர்.

ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா அரசின் இணை அணுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட ஜெனீவா தீர்மானத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட OMP என்ற காணாமல் போனோர் அலுவலகம் இன்றைய தினம் நான்காவது சந்திப்பாக திருகோணமலையில் சந்திப்பொன்றை நடத்தியது.

திருகோணமலை நகர மத்தியில் அமைந்துள்ள இந்து கலாச்சார மண்டபத்தில் OMP யின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு தரப்பினர் கலந்துகொண்டனர்.

இன்றைய கலந்துரையாடலில் 600 பேர் கலந்துகொண்டதாகத் தெரிவித்த OMP யின் தலைவர் சாலிய பீரிஸ், கலந்துரையாடலுக்கு முன்னதாக ஆளுநர் அலுவலகத்திற்கு எதிரில் கடந்த 400 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களையும் சந்தித்ததாகத் தெரிவித்தார்.

எனினும் OMP யின் இன்றைய சந்திப்பை வடகிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஒன்றரை வருடங்களாக தொடர் போராட்டங்களை நடத்திவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், இந்து கலாச்சார மண்டபத்திற்கு வெளியில் கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஸ்ரீலங்கா அரச தலைவரான மைத்ரிபால சிறிசேன நாட்டில் காணாமல் போனோர்கள் என்று யாரும் இல்லை என்றும், தடுப்பு முகாம்கள் என்று எதுவும் இல்லை என்றும் கூறியிருக்கும் நிலையில் காணாமல் போனோர் அலுவலகத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியுமா என்ற இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கதின் திருகோணமலை மாவட்டத்திற்கான தலைவி செபெஸ்டியன் தேவி கேள்வி எழுப்பினார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினரிகள் இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக ஏற்றுக்கொண்ட காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர், ஆட்சியில் உள்ளவர்களின் முழுமையான ஒத்துழைப்பு இன்றி இந்த அலுவலகத்தால் எதனையும் செய்ய முடியாது என்று தெரிவித்தார்.

எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட மற்றும் சரணடைந்த நிலையிலும், கைதுசெய்யப்பட்ட நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளே வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நீதி வேண்டி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சம்பவங்களுடன் தொடர்புடையதாக பாதிக்கப்பட்ட மக்களால் குற்றம்சாட்டப்படும் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் உள்ளிட்ட அரச படையினரை எந்தவொரு நிலையிலும் காட்டிக்கொடுக்கப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தொடர்ச்சியாக கூறியும் வருகின்றார். எனினும் இராணுவத்தை காட்டிக்கொடுக்குமாறு தாங்கள் கூறவில்லை என்று தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களுக்கு நீதியை பெற்றுத் தருமாறே கோரிக்கை விடுத்து வருவதாகவும் இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்தனர்.

இன்றைய போராட்டத்தில் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் இணைப்பாளரான அமல்ராஜ் அமலநாயகி, சர்வதேச சமூகத்தையும், பாதிக்கப்பட்ட மக்களையும் ஏமாற்றுவதற்கான நாடகமொன்றையே காணாமல் போனோர் அலுவலகம் அரங்கேற்றி வருவதாக குற்றம்சாட்டினார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த OMP யின் தலைவர் சாலிய பீரிஸ், காணாமல் போனோர் பிரச்சனை என்பது நாட்டிலுள்ள மிகவும் சிக்கலுக்குரிய பாரிய பிரச்சனையாக இருப்பதால் அவற்றுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே OMP அலுவலகம் செயற்படுகின்றதே தவிர, ஜெனீவாவிற்கோ அல்லது சர்வதேச சமூகத்திற்கோ பதிலளிக்க வேண்டும் என்பதற்காக செயற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் OMP யின் தலைவர் சாலிய பீரிஸ் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர்,ஸ்ரீலங்கா இராணுவம், கடற்படை உள்ளிட்ட அரச படையினர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தினர்.

இன்றைய கலந்துரையாடலில் கொழும்பில் வைத்து 2008 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா கடற்படை புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்களில் ஒருவரது தாயாரும் கலந்துகொண்டிருந்ததுடன், தனக்கு நீதிமன்றினாலும் நீதி வழங்கப்படவில்லை என்று கவலை வெளியிட்டார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க