ஸ்ரீலங்காவில் சமூக வலைத்தளங்களை முழுமையாக முடக்குவதற்கு திட்டம்

136shares
Image

சமூக வலைத்தளங்களை முழுமையாக முடக்குவதற்கு ஸ்ரீலங்காவின் தற்போதைய மைத்திரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

பிரதான ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளால் தற்போதைய அரசாங்கத்தின் குழறுபடிகளை சமூக வலைத்தளங்கள் ஊடாகவே அம்பலப்படுத்தி வருவதாலேயே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, சமூக வலைத்தளங்களை முடக்குவதற்குத் தேவையான சட்ட ஆலோசணைகளையும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கமைய சட்ட ஆலோசணைகள் கிடைத்ததும், சமூக வலைத்தளங்களை முழுமையாக முடக்குவது அல்லது அவற்றுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் திட்டமிடுள்ளதாகவும் தெரிவித்த அழகப்பெரும, தேவைப்படின் அதற்காக புதிய சட்டங்களை கொண்டுவரவும் தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை நாட்டில் மீண்டும் குற்றச்செயல்கள் தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவிக்கும் டலஸ் அழகப்பெரும, இதற்கு பாதாள உலகக் கோஷ்டிகளை கட்டுப்படுத்த முடியாத அரசாங்கத்தின் இயலாமையே பிரதான காரணம் என்றும் கூறியுள்ளார்.

எனினும் மஹிந்த அணியினரின் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த மைத்திரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன, தற்போது நாட்டில் குற்றச்செயல்கள் குறைந்திருப்பதாகக் கூறினார்.

கடந்த ஆட்சியில் பாதாள உலகக் கோஷ்டியினரை ஒடுக்கியதாக பெருமிதம் வெளியிடும் மஹிந்தவும் அவரது சகாக்களும், வெள்ளை வான்களில் கடத்தியும், படுகொலை செய்தும் அந்தக் கும்பல்களை முழுமையாக ஒழிக்க முடியாது போன உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் ராஜித்த சுட்டிக்காட்டினார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
`