யார் என்ன சொன்னாலும் பதவி விலக தயார் இல்லை - காதர் மஸ்தான் அடம்

152shares
Image

யார் எந்த போராட்டங்களை நடத்தினாலும் பதவியை விட்டு விலகப் போவதில்லை என்று இந்து கலாசார விவகாரங்களுக்கான பிரதியமைச்சராக நியமிக்கப்பட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அறிவித்துள்ளார்.

முஸ்லிம் எம்.பி ஒருவரை இந்துவிவகாரங்களுக்கான பிரதியமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டதையடுத்து அவ் அமைச்சிற்கு இந்துமதத்திலிருந்து ஒருவரை நியமிக்குமாறும், காதர் மஸ்தானை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பு உட்பட தமிழர் தாயகப் பகுதிகளிலும்கூட ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பிரதியமைச்சர் காதர் மஸ்தான் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக சமூக வலைத்தளங்களிலும், இணையத்தளங்களிலும் செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன.

இதன் உண்மை நிலை குறித்து ஐ.பி.சி தமிழ் செய்திப் பிரிவு, பிரதியமைச்சர் காதர் மஸ்தானை தொடர்புகொண்டு வினவியபோது அதற்குப் பதிலளித்த அவரது செயலாளர் எம். மிஸ்வர், பிரதி அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான எந்தவொரு முடிவையும் காதர் மஸ்தான் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

புனித ஹஜ்ஜுப் பெருநாள் முடிந்த கையுடன், அடுத்த வாரமே பிரதியமைச்சர் என்ற வகையில் தமது கடமைகளை அமைச்சுக்குச் சென்று ஆரம்பிக்க காதர் மஸ்தான் தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இதையும் தவறாமல் படிங்க