வட்டுக்கோட்டை ஆசிரியருக்கு பதினான்கு நாள் மறியல்!

  • Shan
  • June 14, 2018
62shares

பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்று இன்று உத்தரவிட்டது.

வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர், அவரிடம் கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகள் சிலரை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்படுகின்றார் என சங்கானை பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலகருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டன.

அவர் தனக்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்ய மாணவிகளின் பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறப்பட்டது. அதனால் சிறுவர் அலுவலகருடன் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசாரணையில் மாணவிகள் மூவரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

அவற்றை அடிப்படையாக வைத்து பதின்ம வயது சிறுமியை துஷ்பிரயோகப்படுத்தியதுடன் மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் ஆசிரியர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளின் பின்னர் அவர், மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டார்.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்கள் என வாக்குமூலம் பெறப்பட்ட மூன்று மாணவிகளும் இன்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மருத்துவ சோதனைக்குட்படுத்தப்பட்டனர். மருத்துவ அறிக்கையை பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்தனர்.

அதனை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, வட்டுகோட்டையில் இயங்கிய தனியார் கல்வி நிலையத்தில் சிறுமிகள் மீதான பாலியல் வதைகளுக்கு வேறு ஒரு ஆசிரியருக்கும் தொடர்பிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அந்தத் தகவல் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலையிலிருந்து ஆசிரியர் இடைநீக்கம்

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் வட்டுக்கோட்டையில் பிரபல பாடசாலையில் கற்பிக்கின்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து ஆசிரியர் நீதிமன்றால் விடுவிக்கப்படும்வரை பாடசாலையிலிருந்து இடைநிறுத்துவதாக பாடசாலை அதிபர் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க