மஹிந்த காலத்தில் வெள்ளைவேன் கலாசாரமும் தலைவிரித்தாடியது.!

55shares

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தின் போது பல ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர், வெள்ளைவேன் கலாசாரமும் தலைவிரித்தாடியது என சிறிலங்கா அரசாங்கத்தின் சட்டம், ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (10.07.2018) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அந்தக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சட்டம், ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார்.

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் 69 ஆவது பிறந்த தினமான கடந்த யூன் மாதம் 20 ஆம் திகதி நாட்டின் முக்கிய பௌத்த தலைமை பிக்குகளுக்காக அவரது கொழும்பு இல்லத்தில் தானமொன்றை வழங்கியிருந்தார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சிங்கள பௌத்த கடும்போக்குவாத தரப்பினருக்கு ஆதரவாக குரல்கொடுத்துவரும் அஸ்கிரிய பீடத்தின் துணை மகாநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர், கோட்டாபய ராஜபக்ச அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதும், ஹிட்லராக மாறியாவது நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என ஆசீர்வாதம் வழங்கியிருந்தார்.

அஸ்கிரிய பீடத்தின் துணை மகாநாயக்கர் வெண்டருவே உபாலி தேரரின் இந்தக் கூற்றுக்கு தேசிய அரசாங்கத்தின் தலைவர்களான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ள நிலையில், வெண்டருவே உபாலி தேரரின் தனிப்பட்ட முறையில் வழங்கிய ஆசீர்வாதத்தை பிறர் தமது அரசியலுக்காக பயன்படுத்தி வருவதாக கோட்டாபய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் சட்டம், ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார, கோட்டாபய ராஜபக்ச புதிதாக ஹிட்லாக மாற வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.,

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச நாட்டில் தற்போது இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துவருகின்றார். அவர் கடந்த ஆட்சியின் போது இடம்பெற்ற வன்முறைச் சம்வங்களை மறந்துவிட்டு பேசுவதாக தெரிகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தின் போது பல ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர், உண்மையை வெளிப்படுத்திய ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது, பலரை கடத்திச் சென்று படுகொலை செய்யும் வெள்ளைவேன் கலாசாரமும் தலைவிரித்தாடியது.

இவ்வாறு வன்முறைகளால் நிறைந்திருந்த கடந்த ஆட்சியினை மறந்துபோயுள்ள கோட்டபாய ராஜபக்ச தற்போது முதலைக் கண்ணீர் வடிக்கின்றார். அன்றைய ஆட்சியின் போதே முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர் குமார் குணரட்னம் உள்ளிட்ட பலர் வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்டனர்.

இன்று அவ்வாறான வன்முறைகள் நாட்டில் அதிகரித்து காணப்படுகின்றதா? இவ்வாறான நிலையில் கடந்த ஆட்சியின் போது அதிகமான வன்முறைகள் இடம்பெற்றதா? அல்லது தற்போதைய ஆட்சியில் அதிகம் இடம்பெறுகின்றதா என்பது தெடர்பில் எம்மால் யூகித்துக்கொள்ள முடியும்.

அத்தோடு ரதுபஸ்வல போராட்டத்தின் போது 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது போன்ற நாட்டில் இடம்பெற்ற பல்வேறு கொலைச் சம்பவங்கள் போன்றவற்றினூடாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹிட்லராக செயற்பட்டார் என்பதை நிறூபித்துள்ளார்.

இவ்வாறு நாட்டில் பல குற்றச்சம்பவங்களுக்கு பின்நிற்கும் அவர் தற்போது முதலைக் கண்ணீர் வடித்து வருகின்றார். இவ்வாறான ஒருவர் மீண்டும் அதிகாரத்தை பெற்றுக்கொண்டால் நாம் மீண்டும் ஹிட்லர் ஆட்சிக்கு முகம்கொடுக்க நேரிடும்.”

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் நளின் பண்டார, கோட்டபாயவின் அரசியல் பிரவேசத்தை அவரது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜாக்சவும் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு கோட்டாபய ராஜபக்ச எளிய மற்றும் வியத்மக என்ற அவரது விசுவாசிகளான முன்னாள் இராணுவத் தளபதிகள் உட்பட ஓய்வுபெற்ற படை அதிகாரிகள் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் புத்தி ஜீவிகள் என்று அழைத்துக்கொள்ளும் கடும்போக்கு சிங்கள பௌத்த நிலைப்பாட்டுக்காக தொடர்ச்சியாக குரல்கொடுத்துவரும் மருத்துவர்கள், பொறியலாளர்கள் மற்றும் வங்கியாளர்கள் ஆகியோரைப் பயன்படுத்தி நாடு தழுவிய ரீதியில் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார்.

இதனை விரும்பாத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடந்தவாரம் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு நெளும் மாவத்தையிலுள்ள தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கோட்டாபய ராஜபக்சவையும் அழைத்திருந்த நிலையில், வியத்மக என்ற ஒரு திட்டங்களும் இல்லை என்று கூறியதுடன், மஹிந்த சிந்தனையே புதிய ஆட்சியில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க