அரசியல்வாதிகளை கைது செய்யுமாறு வலியுறுத்தும் மகிந்த மகன்; காரணம் இதுதான்!

65shares

யாழ்ப்பாணம் உட்பட வடக்கிற்கு அரசியல் வாதிகளின் வாகனங்களிலேயே போதைப்பொருள் கடத்தப்படுவதாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷவரனே பகிரங்கமாக குற்றம்சாட்டியிருப்பதால், உடனடியாக சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பானத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ச, யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மைத்ரி – ரணில் தலைமையிலான அரசாங்கமும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் யூன் 22 ஆம் திகதி நடைபெற்ற நடமாடும் சேவையொன்றில் கலந்துகொண்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ வேண்டுமானால் விடுதலைப் புலிகள் இயக்கம் மீள உருவாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு கூறி தேசிய அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்திய விஜயகலாவிற்கு 10 கோடி ரூபாவை கொடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவரது பொதுஜன முன்னணியில் இணைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தின் சமூக சேவைகள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சுமத்தியிருந்தார்.

ராமநாயக்கவின் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் யாழ் ஊடகவியலாளர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் வினவினார்.

“இது முற்றிலும் பொய்யான ஓரு கருத்தாகும். நாம் தீவிரவாதத்தினை எதிர்க்கின்றோம். 30 வருட யுத்தத்தின் பின்னர் புதிய அரசாங்கத்திடம் கடந்த 2015 ஆண்டு நாம் நாட்டை ஒப்படைத்தோம். எனினும் இன்று வடக்கில் மட்டுமல்லாது தெற்கிலும் மக்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழும்பியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி தீவிரவாதத்திற்கு இடமளிக்க ஒருபோதும் விரும்ப மாட்டார். அதன் காரணத்ததால் நாம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் தரப்புடன் இணைந்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க மாட்டோம். முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முன்வைத்த கருத்துக்கு எதிராக அவருக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர ஆகியோர் விசாரணைகளுக்கு உத்தரவிடுவார்கள் என்று நம்புகின்றோம்.

அதுமட்டுமல்லாது கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உறையாடிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கினைச் சேர்ந்த அரசியல் தலைவர்களின் வாகனங்களிள் வடக்கிற்கு போதைப் பொருள் கடத்தல் இடம்பெறுவதாக தெரிவித்தார். தற்போது போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருக்கின்றார். இவ்வாறான நிலையில் இவ்வாறு வடக்கிற்கு அரசியல் தலைவர்களின் வாகனங்களினூடாக கட்த்தப்படும் போதைப்பொருட்கள் தொடர்பிலும் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.”

நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்கட்சியாக செயற்படாது மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாகவே தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

இதனாலேயே தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கிற்கு தேவையற்ற அபிவிருத்தித் திட்டங்களை நல்லாட்சி அரசாங்கம் முன்வைக்கும் போதும் அவற்றுக்கு எதிரப்பை வெளியிடாது, ஆதரவாக வாக்களிப்பதாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.

“முற்றுமுழுதாக தமிழ் மக்களின் வாக்குகளின் மூலமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் எதிர்க்கட்சியாக உள்ளது. எனினும் நாடாளுமன்டறில் இதுவரை நடைமுறை அரசாங்கத்திற்கு எதிராக ஒரு வாக்குகளையும் பயன்படுத்தியது இல்லை.

தமிழ் மக்களுக்கு கிடைக்கவிருந்த நிவாரணங்களை பட்ஜெட்டிலிருந்து நீக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஆதரவளித்தது. அதேபோல பசளை நிவாரணம் வழங்கும் போதும், அரசாங்கம் வடக்கு மக்களுக்கான நிவாரணங்களை குறைத்து அபிவிருத்தித் திட்டங்களை நிறுத்தும் போதும் அரசாங்கத்திற்கு நாடாளுமன்றில் ஆதரவாக வாக்களித்தது.

அதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது பெயருக்கு மாத்திரமே எதிர்க்கட்சியாக செயற்படுகின்றது, ஆனால் இருப்பது அரசாங்கத்திலாகும். வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் இளைஞர்கள் திருமலையில் வைத்து கேள்வியெழுப்பிய போதும். தனக்கு வேலையற்றவர்கள் தொடர்பில் அரசிடம் பேசமுடியாது மாறாக அரசியலமைப்பு தொடர்பாகவேயே பேசுவேன் எனத் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு வடக்கின் இளைஞர்களின் சாதாரண வேலையற்ற பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்திடம் பேசமுடியாத ஓர் கட்சி எவ்வாறு ஆளும் அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சியாக அமையமுடியும்?” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க