இந்தியாவை நம்பி பயன் இல்லை நம்மிடம் உள்ள இரண்டு சட்டங்களையும் பிரயோகிப்போம்!

15shares

வடபகுதி கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி தொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கைதுசெய்ய வெளிநாட்டவர் படகு திருத்தச் சட்டத்தினையும், இழுவைப்படகு தடைச் சட்டத்தினையும் பயன்படுத்த இந்தியாவிடம் கையேந்த வேண்டிய அவசியமில்லை என கடற்றொழில் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாக வடமாகாண கடற்றொழில் இணையத்தின் செயலாளர் என்.வி. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

யாழ்.வாடி விருந்தினர் விடுதியில் இன்று (12) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இழுவை படகு தொழிலினால் ஏற்படும் தீங்குகள் பற்றியும், உள்ளுர் இழுவைப்படகுகளின் தாக்கங்கள் தொடர்பாகவும் சட்டவிரோத மீன்பிடி மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்புக்கள் பற்றியும் கலந்துரையாடினோம். எமது அழுத்தங்களுக்கு மத்தியில் இந்திய இழுவைப்படகுகள் விடுவிக்கப்படக் கூடாது என பல அழுத்தங்களைக் கொடுத்து வந்தோம்.

இந்திய அரசாங்கம் இழுவைப் படகு தொழில் தீங்கு விளைவிக்கும் என்பதனை ஏற்றுக்கொண்டு, இந்திய இழுவைப்படகுத் தொழிலாளர்களை மாற்றி, வேறு தொழில் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்வோம் என தெரிவித்திருந்தனர்.

அதேவேளை, , நாகபட்டினத்தில் துறைமுகம் ஒன்றினையும் கட்டிக்கொடுப்பதாக தெரிவித்தனர்.

இரண்டு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதிலும், படகு விடுவிப்பு தொடர்பாக அமைச்சர் பரிசீலிக்கின்றார் என்ற செய்தி எட்டியவுடன் கடற்றொழில் அமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினோம்.

எமது கருத்துக்களை கேட்ட இந்திய அரசாங்கம் எம்மைப் பலமுறை ஏமாற்றி விட்டது. இந்திய அரசாங்கம் எமக்குத் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவே, இந்தியாவை நம்ப வேண்டாமென வலியுறுத்தினோம்.

அதேவேளை, கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இழுவை படகு தடைச்சட்டத்தினையும், இந்த வருடம் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டவர் படகுகள் திருத்தச் சட்டத்தினையும் பயன்படுத்துங்கள்,இந்த சட்டத்தினைப் பயன்படுத்துவதற்கு இந்தியாவைக் கையேந்த வேண்டிய அவசியமில்லை.

இரண்டு சட்டங்களையும் நடைமுறைப்படுத்தி எல்லை தாண்டி வரும் இந்திய இழுவைப் படகுகளை அதிகமாக கைதுசெய்தால், இந்திய இழுவைப்படகுகளைத் தடை செய்ய முடியும் என வலியுறுத்தினோம்.

படகுகளை வைத்திருந்தால், பிரச்சினை தீர்ந்துவிடுமா என அமைச்சர் எம்மிடம் கேள்வி எழுப்பினார். பிரச்சினை தீர்ந்துவிடாது, கொஞ்சம் கொஞ்சமாக படகுகளின் வருகை குறைவடையும். பிரச்சினை முடிவடைவதற்கு காலம் எடுத்தாலும், முடிவிற்கு வந்துவிடும் என்பதனை சுட்டிக்காட்டினோம்.

இந்திய அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையை பின்தள்ளிப் போடுவதுடன், குழு ஒன்றினை அமைத்து அந்தக் குழுவின் ஊடாக கலந்துரையாடி, முடிவுகளை எடுப்போம் என அமைச்சர் எம்மிடம் தெரிவித்தார்.

எம்முடைய பேச்சுவார்த்தையின் பின்னர், அமைச்சர் வெளிநாட்டவர் படகுகள் திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய மீனவர்களின் படகுகளை கைதுசெய்ய கடற்றொழில் திணைக்களத்திற்கு அறிவித்திருக்கின்றார். இது எமக்கு மகிழ்ச்சியை தருக்கின்றது.

கடற்றொழில் நீரியல்வள அமைச்சருக்கு எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதுடன், யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க