ஸ்ரீ லங்காவுக்கு சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரிக்கை!

  • Shan
  • July 12, 2018
31shares

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் திட்டத்தை நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்புச் சபை ஸ்ரீலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

மரண தண்டனையை நிறைவேற்றும் பட்சத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு காணப்படும் நன்மதிப்பு இல்லாது போய்விடும் என லண்டனை தளமாக கொண்ட சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சிறைச்சாலைகளுக்குள் இருந்தவாறு பாரியளவில் போதைப் பொருள் கடத்தலை மேற்கொள்கின்ற 19 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கொடூரமானதும் மாற்றமுடியாதுமான மரண தண்டனையை விலக்கி வைக்கும் விடயத்தில் நீண்டநாட்களாக ஸ்ரீலங்கா சாதகமாக செயற்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

சுமார் 40 வருடங்களின் பின்னர் மரண தண்டனையை ஸ்ரீலங்கா அமுல்படுத்துமாயின் நாட்டிற்கு இருக்கும் நன்மதிப்பு இல்லாது போய்விடும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவிற்கான பிரதிப் பணிப்பாளர் தினுஷிக்கா திஸாநாயக்க கூறியுள்ளார்.

மரண தண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை உடனடியாக அரசாங்கம் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், மரண தண்டனை விதிக்கும் விடயத்தில் இதுவரை காலமும் பின்பற்றிய வழமையான நடைமுறையை பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மரண தண்டனையை முழுமையாக ஒழிப்பதற்கான முதல் படியாக உத்தியோகபூர்வ மரண தண்டனையை ஒழிக்கும் சட்டவரைபை இயற்ற வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆசியப் பிராந்தியத்தில் ஏனைய நாடுகள் மரண தண்டனையை அமுல்படுத்திய போதிலும் மரண தண்டனையை அமுல்படுத்தாத நாட்டிற்கு முன்னுதாரணமாக ஸ்ரீலங்கா இருந்ததாகவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவிற்கான பிரதிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

மரண தண்டனையை அமுல்படுத்துவதானது தவறான பாதையாகும் எனவும் கொடூரமான விடயமான மரண தண்டனையை அமுல்படுத்தும் நாடுகளின் பட்டியலில் ஸ்ரீலங்காவும் இணையும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குற்றம் மற்றும் மரண தண்டனை அமுல்படுத்தும் முறைகளை கருத்தில்கொள்ளாமல் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மரண தண்டனை விதிப்பதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க