விஜயகலா இனி நாடாளுமன்றத்துக்குள் செல்ல முடியாதா? அமைச்சர் என்ன சொல்கிறார்!

115shares

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாக்கப்பட வேண்டும் என்று கூறிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்புரிமையையும் பறிக்க வேண்டுமென விஜயகலா மகேஷ்வரனின் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் நவின் திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிக்கொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உறையாற்றிய அமைச்சர் திஸாநாயக்க, விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று விசாரணை அறிக்கை கிடைக்கப் பெற்றதும் அவருக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

“ஐக்கிய தேசியக் கட்சியானது முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. எனினும் இதற்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் காலம் தேவைப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கபிர் ஹாசிம், ரஞ்சித் மத்தகம பண்டார மற்றும் நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள தலமையில் குழுவொன்றினை நியமித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீதான ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

அதன் மூலம் நியாயமான அறிக்கையொன்று சட்டமா அதிபருக்கு முன்வைக்கப்படும் என எதிர்ப்பார்க்கின்றேன். எனினும் தனிப்பட்ட ரீதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளேன். அவர் எந்தவொரு மனநிலையிலும் அவ்வாறான கருத்தினைத் தெரிவித்திருக்கக்கூடாது. தெற்கில் உள்ள எமக்கும் பல பிரச்சினைகள் உள்ளன எனினும் நாம் அவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதில்லை. அரசியல் தலைவரானதும் ஒரு ஒழுக்கம் இருக்க வேண்டியது கட்டாயமாகும். நாம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாக நாடாளுமன்றுக்குள் வரும்போது மேற்கொள்ளும் உறுதிமொழியினை ஒருபோதும் தட்டிக்கழிகக் கூடாது. அவ்வாறு செய்தால் அதற்கான விளைவுகளினை கட்டாயம் சந்திக்க வேண்டியது அவசியம்.

புனர்வாழ்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் கட்சியினரால் யூலை ஐந்தாம் திகதி யாழ்ப்பாணம் உட்பட தமிழர் தாயகப் பகுதிகளில் கரும்புலிகள் நாள் அனுட்டிக்கப்பட்டிருந்தது. வெளிநாடுகளில் வாழும் போராளிகளின் கோரிக்கைக்கு அமையவே யாழ்ப்பாணம் நெல்லியடியிலுள்ள முதலாவது கரும்புலியான கப்டன் மில்லரின் நினைவிடத்தில் கரும்புலி நாள் பிரதான நிகழ்வை அனுட்டித்ததாக புனர்வாழ்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் இன்பராசா அறிவித்தும் இருந்தார்.

இந்த நிலையில் கரும்புலிகள் நாள் அனுட்டிக்கப்பட்டதற்கு எதிராக கடும் கண்டனம் வெளியிட்டுள்ள சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்களே இவ்வாறான செயற்களை தூண்டிவிடுவதாகவும் குற்றம்சாட்டியிருக்கின்றார்.

“அண்மையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புலிகளை நினைவுகூர்ந்தமை தொடர்பிலான 5 சீ.சீ.டிவி காணொளிகள் பாதுகாப்பு தரப்புகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றை மையப்படுத்தி தொடரும் விசாரணைகளின் போது குறித்த காணொளிகளில் உள்ளவர்கள் தொடர்பிலான விவரங்களும் அறியப்பட்டுள்ளன. அனுமதிக்கப்படாத செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் மிகுந்த அவதானத்துடன் இருப்தோடு, இவ்வாறு யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவது இல்லை. மாறாக திடீரென ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுபவை என்றும் அறியமுடிந்துள்ளது.

எனினும் அண்மையில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இரு மாகாணங்களிலுமே கரும்புலிகளை நினைவுகூர்ந்த 5 சம்பவங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளன. உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள் புலம்பெயர் அமைப்புக்களின் வழிநடத்தலின் பிரகாரம் இணையம் வாயிலாகவேயே முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. எனினும் ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் விடுதலைப் புலிகளின் இயக்கம் மேலோங்குவதனை ஆதரிக்காது.

இவ்வாறு புலம்பெயர் அமைப்புக்களின் செயற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்புக்கள் உஷாராகவே இருக்கும் வேளையில், ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான பாதுகாப்பு தரப்பு புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகள் குறித்து கழுகு பார்வையுடன் இருக்கும். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது தெரியவந்தால் முப்படையினருக்கு குறித்த இடங்களுக்கு விரைந்து செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.”

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க