விடுதலைப் புலிகள் இல்லாததால் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியுள்ள இலங்கை!

  • Shan
  • August 07, 2018
191shares

இலங்கையில் தற்பொழுது மிக மோசமாகத் தலைதூக்கியுள்ள போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பில் பரபரப்பான சூழ்நிலை ஒன்று தோன்றியுள்ளது.

குறிப்பாக முப்படையினரின் பாதுகாப்பு முற்றுகையால் சூழப்பட்டுள்ளதாக வர்ணிக்கப்படும் இலங்கையில் இந்த போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான போதைப்பொருள் வர்த்தகம் தினந்தோறும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் இதுகுறித்த பலதரப்பு கருத்துருவாக்கங்களும் எழுந்துள்ளன.

இதேவேளை போதைப்பொருள் கடத்தலுடன் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் அந்த தண்டனையானது மிக விரைவில் அமுல்ப்படுத்தப்படவேண்டும் என்றும் ஸ்ரீ லங்காவின் அரசுத் தலைவர் முடிவெடுத்துள்ளார்.

இதன்பின்னர் மரண தண்டனையை நிறைவேற்றும் அலுக்கோசு பதவிக்கு அவசர அவசரமாக விண்ணப்பமும் கோரப்பட்டுள்ளது.

நான்கு தசாப்த காலமாக இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படாத மரணதண்டனையானது தற்பொழுது மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்ற தேவைப்பாடு எழுந்துள்ளமையானது போதைப்பொருள் கடத்தல் இலங்கையில் எவ்வளவுதூரம் தலைதூக்கியுள்ளது என்பதனை நாம் மிக இலகுவாகவே ஊகித்துக்கொள்ளலாம்.

காலம் காலமாக கட்டமைக்கப்பட்டு மிகப் பலம்வாய்ந்த ஒரு மரபுவழி இராணுவமாக வளர்ச்சியடைந்திருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் அபார சக்தியில் அணு அளவு சக்தியைக்கூட விட்டுவைக்காது நசுக்கியதாக ஸ்ரீ லங்கா அரசு மார்தட்டிக்கொண்டது.

முப்படையினராலும் தேடிக்கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த வெற்றி மமதை, கடந்த எட்டு ஆண்டுகளில் தமிழ் மக்கள் மீதான பல்வேறு மன நோகடிப்புச் சந்தர்ப்பங்களை நாட்டில் ஏற்படுத்தியிருந்தது.

இது இவ்வாறிருக்கையில் விடுதலைப் புலிகளின் நிழல் அரசு நிலவிய தமிழர் பிரதேசங்களிலும்சரி (விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசங்கள்) அவர்களது ஆயுதப்படை நிலைகொள்ளாதிருந்த தமிழர் பிரதேசங்களிலும்சரி (இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள்) போதைப்பொருள் பாவனை என்ற கதைக்கே இடமில்லாதிருந்தது.

குறிப்பாக விடுதலைப்புலிகளால் ஆளப்பட்ட மக்கள் மத்தியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் என்ற கதைக்கே இடமில்லாதிருந்தது. போர்க்கள நடவடிக்கைகளோடு சமூக சீர்கேடுகள் பற்றிய விடயங்களிலும் விடுதலைப் புலிகள் மிக உன்னிப்பான அவதானத்தினைச் செலுத்தியிருந்தமை இந்த நிலைமைகளை தொடர்ந்து தக்கவைக்க உறுதுணையானது.

தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் மட்டுமல்லாது இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலும்கூட இதுபோன்ற சமூக அநீதிகள் நிறைவேறாதிருப்பதை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை மிகத் தீவிரமாக கண்காணித்துக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தது.

இப்படியான ஒரு சூழ்நிலையில் பல்வேறு நாடுகளால் வழங்கப்பட்ட ராடர் உள்ளிட்ட அதி நவீன கருவிகளையெல்லாம் தமது படைத்துறைக் கட்டமைப்புடன் இணைத்திருக்கும் பாதுகாப்புத் துறையினரையும் மீறி நாட்டிற்குள் போதைப்பொருள் ஊடுருவித் தலைவிரித்தாடுகிறது.

விடுதலைப் புலிகளை அணுவணுவாய்த் தேடித்தேடி வேட்டையாடி அவர்களின் மீழெழுச்சியை ஒருபோதுமே அனுமதிக்கமாட்டோம் என்று மார்தட்டிய படைத்துறை போர் முடிந்து கடந்த எட்டு ஆண்டுகளாக அதனை கழுகுக் கண்கொண்டு பார்த்துவருகிறது. அதில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியும் கண்டுள்ளது. தமிழ் மக்கள் மனதில் இருக்கும் விடுதலைப் புலிகள் பற்றிய சிந்தனைகளை அழிப்பதிலிருந்து தோல்வி கண்டாலும் நாட்டிற்குள் விடுதலைப்புலிகளின் ஆயுதச் செயற்பாடு தொடர்பில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பேணுகின்றது.

இந்தச் சூழ்நிலையில் நாட்டையே முற்றுகையிட்டு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக சொல்லிக்கொண்டிருக்கும் இலங்கையின் படைத்துறையானது அதே தேசிய பாதுகாப்பிற்கு குந்தகமாக அமையும் போதைப்பொருள் கடத்தல்களை மட்டும் எவ்வாறு கட்டுப்படுத்தமுடியாமல் திண்டாடுகின்றது என்பதுதான் சமூக அக்கறை சார்ந்த பலரையும் தற்பொழுது கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

இவ்வாறான ஒரு இக்கட்டு நிறைந்த சூழ்நிலையில் மரண தண்டனை மூலம் போதைப்பொருள் கடத்தலை தடுக்கலாம் என்ற இலங்கை அரசுத் தலைவரின் எண்ணமானது எவ்வளவுதூரம் சாத்தியப்பாடாகப்போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கமுடியும்.

இதையும் தவறாமல் படிங்க