பாரிய நெருக்கடிக்குள்ளாகும் இலங்கை! மக்களின் நிலை?

55shares

சம்பள அதிகரிப்பை கோரி ஸ்ரீலங்கா ரயில்வே சாரதிகள் முன்னெடுத்திருக்கின்ற வேலைநிறுத்தப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

இந்த நிலையில் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள தனியார் பஸ் சாரதிகள் நாளை மறுதினத்திலிருந்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா ரயில்வே திணைக்களத்தின் ரயில் சாரதிகளும், இயந்திர உதவியாளர்களும் இணைந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடந்த புதன்கிழமை மாலை 3 மணிமுதல் திடீர் வேலைநிறுத்தமொன்றை ஆரம்பித்தனர்.

நாடளாவிய ரீதியிலான இந்த வேலைநிறுத்தத்திற்கு சம்பள உயர்வு கோரிக்கையே அடிப்படை காரணமாக சுட்டிக்காட்டப்பட்டது.

தொழில் முடிந்தபின்னர் வீடு திரும்பும் நோக்கில் ரயில் நிலையங்களுக்கு வந்த பயணிகள், திடீர் வேலைநிறுத்தம் காரணமாக ஆத்திரமடைந்ததோடு ஸ்ரீலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள மத்திய ரயில்வே நிலையத்திற்குள் நுழைந்ததால் களேபரம் ஏற்பட்டது.

மேலும் ரயில் பயணிகள் பஸ் பிரயாணங்களை மேற்கொள்ள முயற்சித்தபடியினால் வழமையான பஸ் பிரயாணிகளுக்கும், ரயில் பயணிகளுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்ட அதேவேளை, ரயில்வே அதிகாரிகளின் வேலைநிறுத்தத்திற்கு எதிராக புறக்கோட்டை மத்திய ரயில் நிலையத்திற்கு முன்பாக பயணிகளால் ஆரம்பிக்கப்பட்ட பாரிய போராட்டம் அன்று இரவுவரை நீடித்தது.

இதன் காரணமாக நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு பொலிஸாரால் முடியாமற்போனபடியினால் விசேட அதிரடிப்படையினர் மத்திய ரயில் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர்.

எவ்வாறாயினும் தீர்வு கிடைக்கும்வரை வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று ரயில்வே சாரதிகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை சில ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு முடிந்ததாக ரயில்வே திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அண்ணளவாக மாதாந்த சம்பளமாக இரண்டு இலட்சம் ரூபா பெறுகின்ற ரயில்வே சாரதிகளின் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு எந்தவித அடிப்படைக் காரணமும் இல்லை என்று அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.

கம்பஹா மாவட்டம் களனி பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பிராந்திய அபிவிருத்தி அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரயில்வே சாரதிகளின் தொழிற்சங்கப் போராட்டத்திற்குப் பின்னால் அரசியல் சூழ்ச்சி ஒன்று இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டார்.

பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் - தொழிற்சங்கப் போராட்டத்திற்கு இறங்கும்போது நியாயமான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். இரண்டு இலட்சம் ரூபா சம்பளமும், 500 மணித்தியாலங்கள் மேலதிக நேரமும் ரயில் சாரதிகள் செய்கின்றனர். சிறந்த சம்பளம் பெறும் தொழிலாகும்.

அவர்களது கொடுப்பனது பற்றிய பிரச்சினை உள்ளதுதான். ஆனால் மக்களைப் பாதிக்கின்ற அளவுக்கு போராட்டம் செய்வது நியாயமானதல்ல. அரசாங்கமும் தொழிற்சங்கம் பக்கமாக நித்தமும் சிந்திக்காமல் மக்கள் சார்பாகவும் பார்க்க வேண்டும். இந்த தொழிற்சங்கப் போராட்டத்திற்குப் பின்னால் அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்று இருக்கிறது.

கோருகின்ற அளவுக்கு சம்பளம் வழங்கப்படுவதற்கு சிறந்த பொருளாதாரம் நாட்டில் இருக்க வேண்டும். எனவே அரசாங்கம் சிறந்த, தைரியமான தீர்மானம் ஒன்று எடுக்க வேண்டும்.

இதேவேளை நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு, உதிரிப்பாகங்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு உட்பட பல பிரச்சினைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க