சிறுமியின் மரணத்திற்குக் காரணமான கருணா குழு உறுப்பினரை காப்பாற்ற முயலும் சிறிலங்கா காவல்துறை! -திரண்டெழுந்த பொதுமக்கள்!!(வீடியோ)

531shares

மட்டக்களப்பு தன்னாமுனை காமாட்சி புரம் கிராமத்தில் பலியான சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்கள் குறித்து விசாரணை செய்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வீட்டுகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாசா அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மட்டக்களப்பு தன்னாமுனை காமாச்சிபுரம் வீட்டு திட்ட கிராமத்தில் வெட்டப்பட்டிருந்த குளத்தில் விழுந்த எட்டு வயது சிறுமி பலியாகியிருந்தார்.

குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்ததுடன் சம்பவத்திற்கு காரணமான மணல் கொள்ளையர்கள் கைது செய்யப்படவில்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

13 திகதி தங்களுக்காக கட்டப்பட்ட புதிய வீட்டில் குடியேறும் கனவுடன் கல்லடியில் இருந்து வந்த எட்டு வயது சிறுமி பலியாகிய சம்பவத்திற்கு காரணமான ஒப்பந்த காரர்களை மூடி மறைக்க அரச உயர் அதிகாரிகள் முயற்சி செய்த போதும் அது குறித்து அறிந்து கொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் அதிகாரிகளை மிக மோசமாக ஏசியதுடன் உடனடியாக குழு ஒன்றை அமைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சிறுமியின் மரணத்திற்கு காரணம் மண்ணை விற்கும் கொள்ளையர்களின் பணத்தாசையால் காமாட்சி கிராமத்தில் இரவோடு இரவாக வெட்டப்பட்ட குளமே என தெரியவந்துள்ளது.

சிறுமியின் உயிரை பறிப்பதற்கு காரணமான முன்னாள் கருணா குழு உறுப்பினரும் த‌ற்போதைய பிரபல மண் தாதாவான ஞானப்பிரகாசம் யூலியன் ஜொய் பிரகஷ் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளதாக பிரதேச செயலாளர் மற்றும் பொலீஸ் தரப்பினர் தெரிவித்திருந்த நிலையில் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பலியான சிறுமி மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியில் தரம் 3 கல்வி கற்கும் மாணவியாகும்.

சிறுமியின் மரணம் எப்படி நடந்தது?

மட்டக்களப்பு தன்னாமுனை காமாச்சிபுரம் வீட்டு திட்டத்தை திறந்து வைப்பதற்காக கடந்த 13.08.2018 அன்று அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் வருகை தரவுள்ளார் என்று கூறி குறித்த வீட்டுத்திட்ட கிராமத்தின் நடுவில் சிறிய குளம் அமைக்கும் பணி ஆரம்பித்துள்ளனர்.

சவுக்கடி மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பெயரில் சுமார் 10 இலட்சம் ரூபாய் பெருமையில் அமைக்கப்பட இருக்கும் இந்த குளத்திற்கான ஒப்பந்த வேலையினை பிரபல மண் தாதாவான ஞானப்பிரகாசம் யூலியன் ஜொய் பிரகஷ் என்பவரிடம் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் வருகைக்காக அவசர அவசரமாக குளம் தோன்டப்பட்ட நிலையில் அங்கு விற்பனைக்கு உகந்த மண் இருந்தமையினால் இரவோடு இரவாக இயந்திரங்களை கொண்டு அங்குள்ள நிலத்தை அளவுக்கு அதிகமான ஆழத்திற்கு தோண்டி அங்கிருந்த மண்ணை இரவோடு இரவாக ஏற்றியுள்ளனர்.

அடுதநாள் காலை தாங்கள் குடியேற இருக்கும் வீட்டை துப்பரவு செய்ய தங்களது பெற்றோருடன் வந்த சிறுமி தோன்டப்பட்டிருந்த குளத்தின் அருகில் விளையாடிய போது தவறுதலாக குளத்திற்குள் விழுந்துள்ளது. சம்பவ நடந்த நேரத்தில் குளம் அமைக்கும் ஒப்பந்த காரர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் அந்த இடத்தில் இருந்தும் சிறுமி குளத்தில் விழுந்ததை கவனிக்கவில்லை.

இதேநேரம் குழந்தையுடன் விளையாடிய சிறுவர்கள் மூவரில் ஒருவர் குளத்திற்குள் விழுந்த சிறுமியை தூக்கி எடுத்துள்ளனர். இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பெற்றோர் சிறுமியை மோட்டார் சைக்கிளில் வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போதும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். என தெரிவித்துள்ளனர்.

குற்றவாளிகளை விடுதலை செய்த பொலீசார்?

சிறுமியின் மரணத்திற்கு காரணமான ஒப்பந்தகாரர் கைது செய்யப்பட்டுள்ளார் என பிரதேச செயலாளர் மற்றும் பொலீசார் தெரிவித்திருந்தனர். ஆனால் அன்று மாலை குறித்த ஒப்பந்த காரரை விசாரணையின் பின் விடுதலை செய்துள்ளனழர் இதனால் ஏறாவூர் பொலீசார் மீதான சந்தேகங்கள் வலுத்துள்ளது.

இரவோடு இரவாக ஏற்றப்பட்ட கள்ளமண்!

குறித்த வீட்டு திட்டத்தில் அமைக்கப்படும் குளத்திற்காக தோண்டப்பட்ட மண்ணை சட்டவிரோதமான முறையில் எந்த வித அனுமதியும் இன்றி இரவோடு இரவாக ஏற்றி தன்னாமுனை பிரதான வீதியில் உள்ள ரவீந்திரன் என்பவரின் யாட்டில் பறித்துள்ளனர்.

இதனை கையும் களவுமாக பிடித்த ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் அதற்கு சீல் வைத்துள்ளார்.

நடவடிக்கை எடுக்காத பொலீசார்!

ஆனால் இரவோடு இரவாக சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றியதற்கோ அல்லது அவ்வாறு மண் ஏற்றியதால் சிறுமி உயிரிழந்ததற்கோ காரணமான யாரையும் இதுவரை பொலீசார் கைது செய்யவில்லை.

சாதாரணமாக சட்டவிரோதமாக மண் ஏற்றியவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கும் பொலீசார் இந்த விடயத்தில் இத்தனை ஆதாரம் இருந்தும் சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஒப்பந்த காரரின் வாக்கு மூலம்!

இரவோடு இரவாக மண்ணை ஏற்றுவதற்கு காரணம் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரே காரணம் என்று இரண்டாவது ஒப்பந்த காரரான யூனியன் தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலாளர் சொல்லியே நான் இரவோடு இரவாக மண்ணை ஏற்றினேன் என்று சொல்லியுள்ளார்.

ஆனால் கலையில் குறித்த மண் சட்டவிரோதமாக ஏற்றப்பட்டதாக கூறி பிரதேச செயலாளர் சீல் வைத்துள்ளார்.

அப்படியானால் இரவு நேரத்தில் சட்டவிரோதமான முறையில் மண்ணை ஏற்றுவதற்கு யார் அனுமதி வழங்கியது?

இவ்வாறு சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றியதற்கு எதிராக பிரதே செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ள போது அது குறித்து ஏறாவூர் பொலீசார் சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மேற்குறித்த சம்பவங்களின் மூலம் சட்டம் தனது கடமையைச் செய்ய தவறியுள்ளது என்பது தெளிவாகிறது. அதே போன்று சிறுமியின் மரணத்திற்கான காரணம் பாதுகாப்பற்ற சூழலே என்று பொலீசார் விசாரணையை முடக்க முனைவதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

விசாரணைக்கு உத்தரவிட்ட அமைச்சர்!

மட்டக்களப்பு மயிலம்பாவெளி காமாட்சி கிராமத்தில் அமைக்கப்பட்டுவரும் தாமரைத் தடாகத்தில் 07வயது சிறுமியொருவர் வீழ்ந்து உயிரிழந்தமை தொடர்பில் சுயாதீன விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்ட வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித்த பிரேமதாச தனது அமைச்சு மூலம் ஒரு விசாரணையை நடாத்தப்போவதாக தெரிவித்தார்.

மயிலம்பாவெளியில் அமைக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தினை திறந்துவைத்த அமைச்சர் குறித்த சிறுமியின் இல்லத்திற்கும் சென்று குறித்த சிறுமியின் பெற்றோரிடம் உரையாடினார்.

இதன்போது கருத்து தெரிவித்த குறித்த சிறுமியின் உறவினர்கள் குறித்த குழியானது மண் கொள்ளையிடுவதற்கு அமைக்கப்பட்டதாகவும் குறித்த குழியில் இருந்து மண்ணை கொண்டுசெல்வதிலேயே குறித்த குளத்தினை நிர்மாணம் செய்தவர்கள் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டினர்.

குறித்த குளம் நிர்மாணம் செய்தவர்கள் எந்தவித பாதுகாப்பு ஏற்பாடினையும் செய்யாமல் எழுந்தமானமாக நடந்ததாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.

தமது பிள்ளையின் மரணம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என பெற்றோர் இதன்போது அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இதன்போது அதிகாரிகளுக்கு கடுமையான எச்சரிக்கையினை விடுத்த அமைச்சர் குறித்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என தெரிவித்தார்.

குறித்த சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் முறையான விசாரணை செய்யப்பட்டு அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என அங்கு நடைபெற்ற நிகழ்வின்போதும் அவர் கருத்து தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க