நடு வீதியில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள கேப்பாபுலவு மக்கள்!

32shares

ஸ்ரீலங்கா இராணுவத்தினர் வசமுள்ள முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் காணிகளுக்குள் இருந்த வீடுகள் மற்றும் பயிர்கள் அழிக்கப்பட்டுள்ளதாக கோப்பாபுலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் நடு வீதியில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக கேப்பாபுலவு மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீலங்கா இராணுவத்தினர் சுபீகரித்து வைத்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி கேப்பாபுலவு மக்கள் ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம் நேற்று 589 ஆவது நாளாகவும் கேப்பாபுலவு இராணுவ தலைமையக வாயிலுக்கு முன்னால் தொடர்ந்தது.

138 குடும்பங்களுக்கு சொந்தமான 282 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு கோரி போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் 181 ஒரு ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

எஞ்சிய காணிகளை விடுவிக்குமாறு கோரி கேப்பாபுலவு மக்கள் கேப்பாபுலவு இராணுவ தலைமையக வாயிலுக்கு முன்னால் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி கேப்பாபுலவு மக்கள் மகஜர் ஒன்றை ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு கையளித்துள்ளனர்.

அந்தவகையில் ஜனாதிபதி பிரதமர் பாதுகாப்பு செயலாளர் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருக்கான மகஜரினை நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவிடம் கையளித்ததோடு வடமாகாண முதலமைச்சருக்கான மகஜரினை வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசனிடம் கையளித்தனர்.

அத்தோடு ஜ நா செயலாளருக்கான மகஜரினை தேசிய மீனவர் சங்க பிரதிநிதியிடம் கையளித்தனர்.

இந்நிலையிலேயே கேப்பாபுலவு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கூடாரங்களுக்குள் வாழ்ந்து வருவதாகவும் இதனால் அரசாங்கம் விரைவில் காணிகளை விடுவிக்க வேண்டும் எனவும் கேப்பாபுலவு மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பாதுகாப்பு அமைச்சின் குழு கூட்டத்தில் கேப்பாபுலவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து செயற்படும் பட்சத்திலேயே கேப்பாபுலவு மக்கள் உள்ளிட்ட தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என வடமாகாண விவசாய அமைச்சர் க சிவநேசன் தெரிவித்தார்.

அத்துடன் மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் கேப்பாபுலவு மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

மேலும் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் ஆ. புவனேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
`