இந்த அரசாங்கத்தை தோல்வியடைய செய்ய வேண்டும் - கோட்டாபய ராஜபக்ச!

16shares

தேசிய அரசாங்கம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதை நாட்டு மக்களின் இன்றைய நிலை, எடுத்துக்காட்டுவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக பசில் ராஜபக்சவை நிறுத்துவதற்கு தாம் பூரண ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ள அவர், தாம் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டமை குழப்பத்தை உருவாக்கவே எனவும் சாடியுள்ளார்.

டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபாய் அரச நிதியைப் தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளுக்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ விசேட மேல் நீதிமன்றத்தில் நேற்று காலை முன்னிலையாகியிருந்தார்.

விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது எந்தவித சவால்களும் இருக்கவில்லை. எனினும் அடுத்து வரும் அரசாங்கத்துக்கு பாரிய சாவல்களை இந்த அரசாங்கம் ஏற்படுத்தி வைத்துள்ளது. 2005ஆம் ஆண்டு பாரிய சாவால்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டை பொறுப்பேற்றிருந்தார். அன்று பயங்கரவாதம் தலைதூக்கி இருந்ததுடன் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டது. இன்றும் அன்றைய நிலையை போன்ற சவால்களே காணப்படுகின்றன. சவால்களை கண்டு மஹிந்த ராஜபக்ஷ அழுவதில்லை. நாட்டை மஹிந்தவிடம் ஒப்படைந்தால் சவால்களை எதிர்கொண்டு நாட்டை கட்டியெழுப்புவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த அராசாங்கம் இன்று காணப்படும் நிலை காரணமாக நாட்டு மக்கள் பாரதூரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இந்த அரசாங்கத்தை தோல்வியடைய செய்ய வேண்டியது எதிரணியின் கடமையாகும். எனினும் அதனை செய்யும் வழிமுறை எனக்கு தெரியாது என்றாலும் அது நடந்தாகவேண்டும். இன்று குப்பையைகூட முகாமைத்துவம் செய்ய முடியாத நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. குப்பை மட்டுமல்லாது நாட்டில் சகல விடயங்களும் அவ்வாறான நிலையிலேயே உள்ளன.

இதேவேளை அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நல்லாட்சி அரசாங்கம் பழிவாங்கல் நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாவும் சுட்டிக்காட்டினார்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த போது இவ்வாறான பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டிருந்தன. கொடிய யுத்தத்தில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ நாட்டை மீட்டு தந்திருந்தார். தற்போது ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அது முற்றிலும் தவறான தகவல். எமது குடும்பத்துக்குள் பிரச்சினையை ஏற்படும் நோக்கில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் தெரிவுசெய்யவில்லை. ஜனாதிபதி வேட்பாளரை நான் தெரிவு செய்வதாக இருந்தால் பசில் ராஜபக்ஷவையே முன்மொழிவேன் என தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
`