புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இலங்கையில் காத்திருக்கும் வாய்ப்பு; வெளிப்படுத்திய அமைச்சர்!

240shares

விடுதலை புலிகளுடன் தொடர்புகளை பேணிய கொழும்பிலுள்ள பலர், புலம்பெயர் தமிழர்களுக்கு புலிப்பட்டம் சூட்டுவதாக நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சட்டரீதியாக பணத்தை ஈட்டிய புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஸ்ரீ லங்காவில் முதலீடு செய்வற்கு உரிய வாய்ப்பை நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புகளைப் பேணி பணத்தை உழைத்தவர்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பில் அமைந்துள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நேற்றைய தினம் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் ஊடக சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள், ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற இந்த ஊடகசந்திப்பில், "புலம்பெயர் தமிழர்களை புலிகள் என அடையாளப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்காவில் கருத்துகள் வெளியாவதால், அவர்கள் தமது தாய்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள அஞ்சுகின்றனரே?" என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கையில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்,

"அது தொடர்பில் சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னமும் சில ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புகளைப் பேணி பணத்தை உழைத்தவர்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இதுத் தொடர்பில் மத்திய வங்கியின் விசேட பிரிவு ஆராயும். நாங்கள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பங்களில் புலம்பெயர் தமிழர்களை சந்தித்திருந்தோம். அவர்கள் கொஞ்சம் பணத்தை உழைத்துள்ளமையால் அவர்கள் தமது கரிசனையை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

புலிகளுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கத்தில் நிதியை கோரியவர்கள், அவர்களுக்கு வாகனங்களை விற்பனை செய்தவர்கள், தொலைபேசகிகளை விற்பனை செய்தவர்கள் என பலர் இன்று மிகப்பெரிய மனிதர்களைப்போல் கொழும்பில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அவர்களே இன்று புலம்பெயர் தமிழர்களுக்கு புலி பட்டம் சூட்டுகின்றனர். எனினும் நாம் அவ்வாறு அல்ல சட்டத்திற்கு உட்பட்டு பணம் உழைத்த எவராக இருந்தாலும் அவர்களுக்கு ஸ்ரீலங்காவில் முதலீட்டினை மேற்கொள்ள நாம் வாய்ப்பளிப்போம். சிங்களவர்கள், தமிழர்கள் என்ற பாகுபாடு எம்மிடமில்லை." என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க,

“பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நிசாந்த விக்ரமசிங்க ஆகிய இருவரும் மாத்திரம் சுமார் 200 பில்லியன் ரூபாய் நட்டத்தை நாட்டுக்கு ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

எமது மதிப்பீட்டுக்கு அமைய, நாம் செலுத்தும் கடனில் சுமார் 80 வீதமானவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தால் ஏற்படுத்தப்பட்டவைகளாகும். குறிப்பாக, ஸ்ரீலங்கன் விமான நிறுவனம், மிஹின்லங்கா, ஹம்பாந்தோட்டை துறைமுகம், சூரியவெவ கிரிக்கெட் மைதானம் என அந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இந்த வெள்ளை யானைகளை நடத்திச் செல்வதற்கே பொதுமக்களின் நிதி கடனாக செலுத்தப்படுகின்றது. இதுவே நிலைமை.

இந்த அரசாங்கமும் கடன் பெறவேண்டியுள்ளது. சீனாவிடமிருந்து வெகுவிரைவில் கடன்பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வருமானம் வருமென்றால் கடனை மீள செலுத்துவது ஒன்றும் பெரிய விடயமல்ல. கோட்டாபய ராஜபக்சவும், நிசாந்த விக்ரமசிங்கவும் இணைந்து மிஹின் லங்கா நிறுவனத்திற்கு சுமார் 200 பில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த வருட இறுதியில் சுமார் 2 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டும். கோட்டா மற்றும் நிசாந்தவின் திறமையற்ற நிர்வாகத்தால் நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் 10 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டியிருக்கின்றது” என தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
`