மகாவலி நீரைச் சாட்டி திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்! வடக்கையும் கிழக்கையும் பிரிக்க மாபெரும் சதித்திட்டம்?

44shares

வடக்கையும் கிழக்கையும் பிரிக்கும் முகமாகவே மகாவலி அதிகார சபை வட மாகாண சபையின் காணிகளை கையேற்றதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மகாவலி நீர் வரப்போகின்றது என்று கூறி ,வட மாகாணத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையே அரசாங்கம் நடைமுறைப்படுத்திவருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாரத்துக்கொரு கேள்வி ஊடாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் மணலாற்றில் ஆரம்பித்த சிங்களக் குடியேற்றம் மகாவலி அதிகாரசபையால் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறமை குறித்து வினவப்பட்டது.

இதற்கு பதில் அளித்துள்ள வட மாகாண முதலமைச்சர், முதலில் 1984 ஆம் ஆண்டில் காணி ஆணைக்குழுவின் கீழ் உலர்ந்த வலய விவசாய குடியிருப்பாகத் தொடங்கிய மணல் ஆறு பின்னர் 1988 ஆம் ஆண்டில் மகாவலி பொருளாதார முகவாண்மையத்தினால் கையேற்கப்பட்டது என கூறியுள்ளார்.

அதன் பின்னர் அது மகாவெலி 'எல்' வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1988ம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி மணல் ஆறு உத்தியோகபூர்வமாக வெலிஓயாவாகப் பெயர் மாற்றப்பட்டது எனவும் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

இதன்பின்னர் மணலாறில் ஆரம்பித்த பெரும்பான்மையினரின் பெருந்திட்டம் மகாவலியூடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை தெரிய வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

மகாவலி நீர் வரப்போகின்றது என்று கூறியே அதன் நீர் கொண்டு செல்லப்போகும் இடங்கள் வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்ட போதிலும் இன்று வரைவில் மகாவலி நீர் ஒரு சொட்டேனும் வடமாகாணத்திற்குக் கொண்டு வரப்படவில்லை எனவும அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

தற்போதைய நிலையில் மகாவலி நீர் வரப்போவதுமில்லை என்ற போதிலும் அதனைச் சாட்டாக வைத்து சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

குடியேற்றங்களின் போது அவ்வூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற போதிலும் அவ்வாறு எவரும் முன்வராத நிலையில் முதலில் அப் பிரதேசத்திற்கும் பின்னர் மாவட்டத்திற்கும் அதன் பின் மாகாணத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே சர்வதேச ரீதியாக ஏற்கப்பட்டுள்ள நடைமுறை எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் மக்கட் தலைவர்களுடன் அரசாங்கம் முன்னர் செய்து கொண்ட பின்னர் கைவிடப்பட்ட உடன்பாடுகளில் மாகாணத்தில் தமிழ் மக்கள் முன்வராவிடில் நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்று கூட கூறப்பட்டிருந்தது.

இவற்றை எல்லாம் புறந்தள்ளியே சிறை சென்று வந்த சிங்களக் குற்றவாளிகளை இவ் விடங்களில் அப்போதைய அரசாங்கம் குடியேற்றியது எனவும் வட மாகாண முதலமைச்சர் சாடியுள்ளார்.

அதாவது வடகிழக்கு மாகாணங்களைப் பிரிக்க நடுவில் சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்பட வேண்டும் என்ற கபட நோக்குடனேயே சிங்களத் தலைவர்கள் காய் நகர்த்தி வந்துள்ளனர் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

போர்க்காலத்தில் விடுதலைப்புலிகளால் மேற்படி சிங்களக் குடியேற்ற வாசிகள் விரட்டப்பட்டனர் எனவும் வட மாகாண முதலமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

போர் முடிந்த பின்னர் வெலிஓயா செயற்றிட்டத்தின் கீழ் மணல் ஆறு இருந்த இடங்களில் எல்லாம் மீண்டும் சிங்களக் குடியேற்றங்களை மகாவலி அதிகார சபை ஏற்படுத்தியது எனவும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

அவர்களின் திட்டம் முல்லைத்தீவு, திருகோணமலை, வவுனியா, அனுராதபுர மாவட்டங்களை இணைப்பதாய் அமைந்தது எனவும் முதலமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னர் தமிழ் மக்கள் இருந்த இடங்களில் பலவந்தமாகச் சிங்கள மக்கள் அரசாங்கத்தால் போருக்கு முன்னர் குடியேற்றப்பட்டார்கள் எனக் குறிப்பிட்ட சி.வி.விக்னேஸ்வரன், போருக்கு இவ்வாறான சிங்களக் குடியேற்றங்களும் ஒரு காரணமாக இருந்ததாக கூறியுள்ளார்.

பாரம்பரியமாக குடியிருந்த சிங்களவரை விடுதலைப் புலிகள் விரட்டியதாகவும் அவர்களையே சொந்த இடங்களில் குடியேற்றுவதாக தெரிவித்து சிங்கள குடியேற்றத்தை அரசாங்கம் வழிநடத்திச் சென்றுகொண்டிருக்கின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழர் வாழ்ந்த இடங்களில் சிங்கள மக்களைக் குடியிருத்தி, காணி கொடுத்து, வீடு கட்டப் பணம் கொடுத்து, விசேட அதிரடிப்படையைக் கொண்டு அரசாங்கம் பாதுகாப்பும் கொடுத்துவருவதாக அவர் கூறியுள்ளார்.

நான்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட மகாவலி செயற்றிட்டத்தின் நிர்வாகம் அனுராதபுரத்தில் இருந்தே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது எனவும் வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனாலேயே மற்றைய மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கோ அலுவலர்களுக்கோ அங்கு என்ன நடைபெறுகின்றது என்று தெரிவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

1979 ஆம் ஆண்டில் 23 ஆவது சட்ட மூலமாகவே மகாவலி அதிகாரசபை உருவாக்கப்பட்டதுடன், அதன் மூன்றாம் சரத்து முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் ஒப்புதலோடு உரிய அமைச்சரின் கருத்துப்படி மகாவலி கங்கையின் நீரை அல்லது வேறேதேனும் முக்கிய நதியின் நீரை எங்கெல்லாம் பாவித்து அங்கு முன்னேற்றம் காணமுடியுமோ அந்த இடத்தை அவர் வர்த்தமானியில் பிரசுரிப்பதன் மூலம் 'விசேட நிலப்பகுதி' என்று அதனைப் பிரகடனப்படுத்தலாம் என இந்த சரத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

சகல சிங்கள மக்கள் பிரதிநிதிகளும் அமைச்சரின் இவ்வாறான கருத்தை ஏற்கத் தவறமாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதன் அடிப்படையிலேயே 1988 ஆம் ஆண்டில் ஒரு விசேட வர்த்தமானி மூலம் மகாவலி 'எல்' வலயம் ஸ்தாபிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டில் இன்னொரு வர்த்தமானியில் அது மேலும் விஸ்தரிக்கப்பட்டது எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இது முழுக்க முழுக்க வடக்கையும் கிழக்கையும் பிரிக்கும் முகமாகவே மகாவலி நீரைச் சாட்டி மகாவலி அதிகாரசபையால் வடமாகாணக் காணிகள் கையேற்க்கப்பட்டது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மணலாறில் தொடங்கி தற்போது மகாவலி மூலம் சிங்கள பேராதிக்கம் வடமாகாணத்தில் தொடர்கின்றது எனவும் வட மாகாண முதலமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
`