"நாங்கள் போறம் நீங்களும் வாங்கோ" - யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு!

96shares

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடிய அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு, அனைத்து மக்களையும் ஒன்றுதிரட்டி போராடுமாறு தமிழ் தலைமைகளுக்கு யாழ் பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் வலியுறுத்தி நாங்கள் போறம் நீங்களும் வாங்கோ என்ற தொனிப்பொருளில் அனுராதபுரம் நோக்கிய நடைபவனி முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை குறுகிய புனர்வாழ்விற்கு உட்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் மற்றும் வழக்குகளை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்த கைதிகளுக்கு ஆதரவாக கொழும்பு மெகசீன் மற்றும் கண்டி சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கில் தொடர்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அநுராதபுரம் நிறைச்சாலை நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை நடைபவனியை ஆரம்பித்தனர்.

பெருமளவு மாணவர்கள் கலந்துகொண்டுள்ள இந்த நடைபவனி கிளிநொச்சி, வவுனியா ஊடாக அனுராதபுரம் சிறைச்சாலை வரை சென்றடையவுள்ளது.

சிறைச்சாலையை சென்றடைந்த பின்னர் அங்கு தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்திக் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை யாழ் பல்கலைகழக மாணவர்கள் நடத்தவுள்ளனர்.

யாழ் பல்கலைகழக மாணவர்களின் இந்த நடைபவனி இயக்கச்சியிலிருந்து நேற்று தமது இரண்டாவது நாள் பயணத்தை ஆரம்பித்து கிளிநொச்சியை சென்றடைந்தது.

இந்த நடைபயணத்தின் போது கிளிநொச்சி வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர்களின் அலுவலகத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களையும் மாணவர்கள் சந்தித்துள்ளனர்.

தமது உறவுகளைத் தேடித்தருமாறு கோரி இன்று 598 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து அவர்கள் கலந்துரையாடினர்.

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அலுவலகத்தில் ஊடகசந்திப்பு ஒன்றை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தினர்.

இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கு வகையில் அனைத்து மக்களையும் தமிழ் தலைமைகள் ஒன்றுதிரண்ட வேண்டும் என யாழ் பல்கலைகழக மாணவர்கள் வலியுறுத்தினர்.

தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரங்களும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டபோது அதனை எதிர்த்து கேள்வி கேட்காமயே இளைஞர்கள் ஆயுதமேந்த காரணம் என கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கட்ட உறவுகளின் சங்க உறுப்பினர் ஆனந்தநடராஜா லீலாவதி சுட்டிக்காட்டினார்.

அதேவேளை ஆயுதமேந்தி போராடுவதைவிட எழுத்துருவிலும் அரசாங்கத்திற்கு அழுத்தும் கொடுக்கும் வகையிலும் போராட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து 6 மணிவரை நடைபவனியை முன்னெடுத்த மாணவர்கள் முறுகண்டி மற்றும் கொக்காவில் ஊடாக பனிச்சங்குளம் பகுதியை செற்டைந்துள்ளதுடன் நாளை மாங்குளம் நோக்கி தமது பயணத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
`