யாழில் உறங்கிக்கொண்டிருந்தவர் காலடிவரை வந்த பாம்பு! நீங்களும் இப்படிச் செய்யாதீர்கள்!

  • Shan
  • October 11, 2018
657shares
உறங்கிக்கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

கூலித் தொழிலாளி ஒருவர் நேற்று இரவு வீட்டு வெளி விராந்தாவில் பாய் விரித்து உறங்கியுள்ளார். இதன்போதே நள்ளிரவு நேரம் விசப் பாம்பு ஒன்று அவரது கால் பக்கமாக வந்துள்ளது.

நடந்த விடயத்தை எமது செய்தியாளரிடம் அவர் கூறும்போது,

“நேற்று இரவு வழமையாகவே வெளி விராந்தையில் உறங்கிக்கொண்டிருந்தேன். காற்றோட்டத்திற்காக இவ்வாறு உறங்குவது வழமை. நடுச்சாமம் போல எனது காலை ஏதோவொன்று உரசுவது போல இருந்தது. அத்துடன் எமது நாயும் பக்கத்திலிருந்து குரைத்தபடி இருந்தது. இதனால் உடனடியாக திடுக்கிட்டு எழுந்து பார்த்தபோது காலடியில் இரண்டடி நீளமான விசப் பாம்பு ஒன்று படமெடுத்தபடி நின்றுகொண்டிருக்க எமது வளர்ப்புப் பூனை எனது காலுடன் உரசியபடி அந்தப் பாம்பை நோக்கி உறுமிக்கொண்டிருந்தது. நாயும் பாம்பைப் பார்த்து குரைத்தவண்ணமிருந்தது.

இதனையடுத்து வீட்டிலிருந்த ஏனையவர்களும் எழுந்துவிட்டனர். விசப் பாம்பாக இருந்ததனால் வேறு வழியின்றி அந்த பாம்பை அடித்துக் கொன்று புதைத்துவிட்டோம்.” என்றார்.

மேலும் பூனை தன்னை உரசியிராவிட்டால் தான் எழுந்திருக்கமுடியாது என்று குறிப்பிட்ட அவர் குறித்த இரண்டு பிராணிகளையும் தாம் தவறாமல் உணவு கொடுத்து வளர்த்த நன்றிக்காகவே அவை அவ்வாறு செயற்பட்டுள்ளன என்றார் நெகிழ்ச்சியுடன்.

இது மழைக் காலமாதலால் பாம்பு உள்ளிட்ட விச ஜந்துக்கள் வெளியில் சஞ்சரிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால் வீட்டின் வெளி கதவுகளை மூடிவிட்டு உறங்குவது கட்டாயமானது. உறங்கிக்கொண்டிருக்கும்போது பாம்பு பக்கத்தில் வந்தால் எமது கையோ காலோ நித்திரையில் எம்மை அறியாமல் அசைகின்றபோது பாம்பு தன்னை அச்சுறுத்துவதாக நினைத்து கொத்திவிடும் என்று அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க