புத்தர் சிலைகளை சேதப்படுத்தியவர்களை கண்டுபிடித்த தேரர்

38shares

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்படுவதற்குப் பின்னணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே செயற்பட்டு வருகிறார்கள் என்ற பகிரங்கமான குற்றச்சாட்டை தென்னிலங்கையின் கடும்போக்குவாத அமைப்புக்களில் ஒன்றான தேசிய பிக்குகள் முன்னணி முன்வைத்துள்ளது.

வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்படுவதற்குப் பின்னணியில் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக தெரிவித்த புத்தசாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த தேசிய பிக்குகள் முன்னணியின் தலைவரான பெங்கமுவே நாலக்க தேரர், தமிழர் பகுதிகளில் புத்தர் சிலைகளை அமைப்பதில் எழுகின்ற எதிர்ப்புக்களை போராட்டங்களின் ஊடாகவே அடக்கியாள முடியும் என்றும் குறிப்பிட்டார்.

வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் புத்தர் சிலைகளை சேதப்படுத்துகின்ற செயற்பாடுகளை தென்னிலங்கையிலிருந்து அங்கு செல்லும் சிலரே மேற்கொள்வதாக ஸ்ரீலங்காவின் புத்தசாசன அமைச்சரான விஜேதாஸ ராஜபக்ச, நேற்றைய தினம நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் அமைச்சரின் இந்தக் கருத்து தொடர்பாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த தேசிய பிக்குகள் முன்னணியின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் பதிலளித்தார்.

புத்தசாசன அமைச்சரின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்த தேரர், சிங்கள மக்கள் அல்லாத கிராமங்களை உருவாக்கும் முயற்சிகள் வடபகுதிகளில் இடம்பெற்று வருவதாகவும் இதனை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டதோடு வடபகுதியில் பொலிஸார் தமிழர் தரப்புக்கு சார்பாகவே செயற்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

‘முழுமையாக பிழையான கருத்தாகும். புத்தசாசன அமைச்சர் அங்கு செல்லாத நபர் என்பதோடு ஒன்றுமே அவருக்குத் தெரியாது. அண்மையில் கொக்கிளாய், நாயாறு பகுதிகளுக்கு நாங்கள் விஜயம் செய்தோம். முழுமையாக விகாரைகள், புத்தர் சிலைகள் அங்கு இருப்பதற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டது. விக்னேஸ்வரன் உள்ளிட்ட குழுவினரே எதிர்த்தனர்.

குருந்தன்குளம் என்ற தொல்பொருள் பகுதி 1833ஆம் ஆண்டில் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பிரதேசமாகும். தொல்பொருள் அதிகாரிகளும், கல்கமுவே சாந்தபோதி பிக்குவுடன் சென்றபோது சிறிய புத்தர் சிலை ஒன்றை எடுத்துச் சென்றிருந்தனர். அப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களை அழைத்துவந்து எதிர்ப்பு வெளியிட்டதோடு பொலிஸாரும் அப்போது பிழையாகவே அறிக்கையிட்டனர்.

சாந்தபோதி பிக்குவுக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவையும் பொலிஸார் நீதிமன்றில் கோரினர். குழப்பத்தை ஏற்படுத்திய அரசியல்வாதிகளுக்கு எதிராக பொலிஸார் செயற்பட்டவில்லை. இவ்வாறே வடக்கு, கிழக்கு பகுதியில் இடம்பெறுகின்றன.

நாயாறு பிரதேசம் மிகவும் பழைமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். அங்கு பழைமைவாய்ந்த தொல்பொருட்களை அழித்துவிட்டே வீதிகளை அமைத்துள்ளனர். அந்த இடங்களை பாதுகாப்பாக துப்பரவு செய்ய முயற்சித்தபோதே தமிழ் மக்கள் வந்து எதிர்ப்பு வெளியிட்டனர்.

அங்கு மக்களை கூட்டமைப்பினரே தூண்டிவிட்டன. சாந்தபோதி பிக்கு தளராமல் அங்கு செயற்பட்டதால் எதிர்ப்பு வெளியிட்ட மக்கள் திரும்பிச்சென்றனர். ஆனால் இப்போது முல்லைத்தீவு நீதிமன்றம் அங்கு விகாரைகளை அமைக்க வேண்டாமென உத்தரவிட்டது. இதுபற்றி புத்தசாசன அமைச்சருக்கு என்ன தெரியும்? நாடாளுமன்றத்தில் அவர் பொய்களையே உரைக்கிறார்.

இப்படிப்பட்ட பொய்களினால் நாடாளுமன்றத்தின் இறைமையே மீறப்படுகின்றன. வடக்கில் தமிழ் கூட்டமைப்பு மற்றும் ரிஷாட் பதியுதீனுக்கு ஏற்ற விதத்தில்தான் வடக்கில் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. தமிழ், சிங்களம், முஸ்லிம் அல்லாத வேறு இனத்தவர்களை ரிஷாட் பதியுதீன் வடக்கில் குடியமர்த்த முயற்சி செய்தார்.

ஆகவே முஸ்லிம் மட்டுமே இருக்கும் கிராமங்களை உருவாக்க ரிஷாட் முயற்சிசெய்கிற அதேவேளை சிங்களம், முஸ்லிம் அல்லாத தமிழ் கிராமங்களை உருவாக்க கூட்டமைப்பு முயல்கிறது. இவற்றை பேச்சின் மூலம் நிறுத்த முடியாது. மாறாக போராட்டத்தின் ஊடாகவே முடியும்.

இதேவேளை இந்த ஊடக சந்திப்பில் மேலும் உரையாற்றிய அவர், கடந்த மூன்று வாரங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் பயங்கரவாதக் கைதிகளே என்று தெரிவித்தார்.

தமிழ் அரசியல் விடுதலை செய்யுமாறு கூறுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எந்த உரிமையும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘விடுதலை செய்யுங்கள் என்று கூறுவதற்கு உரிமையில்லை. ஏனென்றால் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடையவர்கள் என்றுகூறிதான் கைது செய்யப்பட்டார்கள். பயங்கரவாதத்திற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எனினும் அவர்கள் அரசியல் கைதிகளாக கைது செய்யப்பட்டிருந்தால் அவர்களை விடுதலை செய்யுமாறு கூட்டமைப்பினரால் கூறமுடியும். அவர்கள் அரசியல் கைதிகள் அல்ல. மாறாக பயங்கரவாத கைதிகளே. ஆகவே பயங்கரவாத கைதிகளை விடுதலை செய்யும்படி எவருக்கும் கோரிக்கை விடுக்க முடியாது. சட்டரீதியான நடவடிக்கை எடுத்து அவர்களை விடுதலை செய்யவோ அல்லது தண்டனை வழங்கவோ முடியும். மேலும் வழக்குகளை விரைவுபடுத்துமாறு நாங்களும் கோருகிறோம்.

அவர்களுக்கு எதிரான வழக்குகள் மட்டுமல்ல, சிங்களவர்களுக்கு எதிரான வழக்குகளும்தான். சட்டத்தின்படி அவர்களுக்கு தண்டனையோ அல்லது விடுதலையோ வழங்கலாம். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூறுகிறதனால் அவர்களுக்கு விடுதலை வழங்குவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது”)

இதையும் தவறாமல் படிங்க