மன்னார் மனித புதைகுழியை பார்வையிட தமிழ் நாட்டில் இருந்து வந்த 7 பேர்!

14shares

மன்னாரில் மேற்கொள்ளப்படும் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளை தமிழ்நாடு மக்கள் கண்காணிப்பகம் என்ற பொது அமைப்பின் பிரதிநிதிகள் பார்வையிட்டுள்ளனர்.

மன்னார் நீதிமன்ற அனுமதியுடன் அவர்கள் இந்த புதைகுழியின் அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.

மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியை அகழ்வு பணிகள் நேற்று 85 ஆவது வேலைநாளாக முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணாராஜாவின் மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இந்த அகழ்வுப் பணிகள் இடம் பெற்று வருகின்றன.

இந்த அகழ்வுப் பணிகளின் போது சந்தேகத்திற்கு இடமான முறையில் புதைக்கப்பட்ட மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, அகற்றப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில் மன்னார் 'சதொச' வளாகத்தில் இடம் பெற்றுவரும் மனித எச்சங்களின் அகழ்வுப் பணிகளை தமிழ் நாடு 'மக்கள் கண்காணிப்பக பொது அமைப்பின் பிரதிநிதிகள் 7 பேர் அடங்கிய குழுவினர் நேற்று வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் பார்வையிட்டுள்ளனர்.

சட்டத்தரணி செல்வராசா டினேசன் ஊடாக மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுக் கொண்ட தமிழ் நாடு 'மக்கள் கண்காணிப்பம்' பொது அமைப்பின் பிரதி நிதிகள் அகழ்வு இடம் பெறும் வளாகத்திற்கு சென்றனர்.

சட்டத்தரணிகள், தடவியல் நிபுணர், பேராசிரியர்கள் உள்ளடங்கலான ஏழு பேர் கொண்ட இந்த குழுவில் இரு பெண்களும் உள்ளடங்கியிருந்தனர்.

அகழ்வு பணிகள் இடம் பெறுகின்ற வளாகத்திற்குள் சென்ற இந்தக் குழுவினர் அகழ்வு பணிகளை தலைமை தாங்கி மேற்கொண்டு வரும் விசேட சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸவை சந்தித்து உரையாடினர்.

இதன்போது வளாகத்தில் இடம் பெற்று வருகின்ற மனித எச்சங்களின் அகழ்வுப் பணிகள் தொடர்பான விளக்கத்தை தமிழ் நாடு 'மக்கள் கண்காணிப்ப பொது அமைப்பின் பிரதிகளுக்கு விசேட சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ வழங்கினார்.

இதன் போது மன்னார் சட்டத்தரணி செல்வராசா டினேசனும் தமிழ்நாட்டு குழுவினருடன் இணைந்து இந்த புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
`