தமிழ் பாடசாலை பெண் அதிபரரை மண்டியிட்டு மன்னிப்புக்கூற வைத்த முதலமைச்சர்!

107shares

தமிழ் பாடசாலை பெண் அதிபர் ஒருவரை மண்டியிட்டு மன்னிப்புக்கூற வைத்த ஸ்ரீலங்காவின் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க உள்ளிட்டவர்களுக்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் குறித்த மனுமீதான விசாரணை இன்றைய தினம் நடைபெற்றபோதே அடுத்தகட்ட விசாரணைக்காக திறந்த நீதிமன்றத்தில் மனுவை அழைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாடசாலையில் அனுமதிப்பதற்காக, முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவிடம் இருந்து எடுத்துக் கொண்டு வந்த கடிதத்தை நிராகரித்ததால், முதலமைச்சர் தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து தன்னை திட்டி, அச்சுறுத்தியதாக பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் ஆர்.பவானி தனது மனுவில் கூறியுள்ளார்.

தனக்கு முன்பாக முழங்காலிட்டு மன்னிப்புக் கோரவும் முதலமைச்சர் அழுத்தம் பிரயோகித்ததாகவும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அதிபர் தனது மனுவில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் ஆர்.பவானி தாக்கல் செய்த மனு இன்றைய தினம் வியாழக்கிழமை பகல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக் அழைக்கப்பட்டிருந்தது.

சம்பவத்தில் உள்ள விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் 25 ஆம் திகதி திறந்த நீதிமன்றத்தில் மனுவை அழைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் பிரதிவாதியான ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க உள்ளிட்டவர்கள் சார்பாக நீதிமன்றில் முன்னிலையாவதற்கு சட்டமா அதிபர் மறுப்புத் தெரிவித்ததையடுத்து தனிப்பட்ட சட்டத்தரணி பிரசன்னமாகியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாடசாலை அதிபர் ஆர். பவானி, தனக்கு நேர்ந்த இந்த அவல நிலையானது இன்னுமோர் அரச அதிகாரிக்கு எதிர்காலத்தில் நேர்ந்துவிடக்கூடாது என்று குறிப்பிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க