திலீபனின் நினைவிடத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த குழுவினர்!

53shares

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த குழுவினர் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்த குழுவினர் இன்று காலை நல்லுர் கந்தசுவாமி ஆலயத்திற்கும் சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீலங்காவிற்கு விஐயம் செய்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், துறைசார் வல்லுநர்கள் கொண்ட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து பல இடங்களுக்கும் சென்று பல தரப்பினர்களையும் சந்தித்து வருகின்றனர்

இந்தக் குழுவினர் இன்று காலை நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையிலேயே மேற்படி குழுவினர் திலீபனின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

குழுவில் தமிழ்நாடு - சென்னை பல்கலைக் கழகத்தின் அரசியல் பொதுநிர்வாகம் மற்றும் சர்வதேச விவகாரங்களிற்கான பீடத்தின் தலைவர் பேராசிரியர் இராமு.மணிவண்ணன், தடயவியல் நிபுணர் பேராசிரியர் சேவியர், மக்கள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி கென்றிதிபேன், தமிழ் துறை பேராசிரியர் அரசேந்திரன், பேராசிரியர் குழந்தைசாமி, பேராசிரியர் இராணி செந்தாமரை, வழக்கறிஞரும் பெண்ணிய செயற்பாட்டாளருமான பாண்டிமாதேவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ் மக்களின் உரிமைக்காக அகிம்சை வழியில் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த திலீபனுக்கு மரியாதை செலுத்தி தங்களது அஞ்சலிகளைச் செலுத்தியதாக அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு கலாச்சார ரீதியான பயணமாக தாம் வருகைதந்திருந்தாலும், திலீபனுடைய நினைவுடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியமை மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை தமிழக குழுவினர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குரலற்ற தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் சந்திப்பை மேற்கொண்டதாகவும் அந்த குழுவினர் குறிப்பிட்டனர்.

இதையும் தவறாமல் படிங்க