யாழ்ப்பாணத்தில் ஏட்டுச் சுவடிகளின் கண்காட்சி!

22shares

யாழ்ப்பாணத்தில் 65,000 க்கும் அதிகமான ஈழத்து தமிழ் ஆவணங்களை எண்ணிமப்படுத்தியுள்ள நூலக நிறுவனத்தில் ஏட்டுச் சுவடிகளை ஆவணப்படுத்தலுக்கான கண்காட்சி ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டு நடைபெற்றுவருகின்றது.

கொக்குவில், ஆடியபாதம் விதி, இலக்கம் 185இல் அமைந்துள்ள நூலக நிறுவனத்திலேயே இந்தக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இந்தக் கண்காட்சி இன்று, நாளை மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று தினங்களில் நிகழவுள்ளது. இக் கண்காட்சியில் விநாயக புராணம், தோம்பு, மாந்திரீகம், சித்த மருத்துவம், மாணிக்கவாசகர் சரித்திரம், தென்கோவில் புராணங்கள், கந்தபுராணங்கள் என 100 க்கும் அதிகமான சுவடிக் கட்டுக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்தோடு சுவடிகள் பாதுகாக்கப்படும் முறை மற்றும் எண்ணிமப்படுத்தும் முறையும் காண்பிக்கப்படுகின்றது. EAP-1056 திட்டத்திற்கமைவாக 60,000 க்கும் அதிகமான சுவடிப்பக்கங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 25,000 க்கும் அதிகமான சுவடிப்பக்கங்கள் எண்ணிமப்படுத்தப்பட்டுவருகின்றன.

பிரித்தானிய நூலகத்தின் சர்வதேச நியமங்களப் பின்பற்றி முன்னெடுக்கப்படும் இச்செயற்றிட்டம் மூலம் சுவடிகளை ஆவணப்படுத்த வருமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க