ஸ்ரீலங்கா முழுவதும் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்!

24shares

ஸ்ரீலங்காவில் நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலையினால் கிழக்கு மாகாணம் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 6695 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் தெரிவித்தார்.

அதேவேளை ஸ்ரீலங்கா முழுவதும் 14 ஆயிரத்து 339 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்காவில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதுடன் பாதிக்கப்பட்ட மக்கள் வேறு பகுதிகளை நோக்கி இடம்பெயர்ந்தும் வருகின்றனர்

இந்நிலையில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள மண்சரிவினால் கண்டி மாவட்டத்தில் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நுவரேலியா மாவட்டத்தில் 125 பேரும் புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 1777 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை காரணமாக 6695 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1886 பேர் இடம்பெயர்ந்து 7 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் 4 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான சமைத்த உணவு பரிமாறப்படுவதுடன், முகாம்களுக்குரிய குடிநீர், சுகாதார வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், மாவட்டத்தின் 9 வீதிகளில் 2 அடிக்கு மேல் நீர் பாய்ந்து வருவதனால் அரசாங்க அதிபரின் பணிப்பிற்கமைய இன்று காலை மட்டக்களக்கு முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3 ஆயிரத்து 869 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 25 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

பொலநறுவை மாவட்டத்தில் வெள்ள நிலைமை காரணமாக 146 பேரும், அநுராதபுரத்தில் 109 பேரும் கேகாலையில் 52 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் 4 பேரும் முல்லைத்தீவில் 647 பேரும், வவுனியா மாவட்டத்தில் 21 பேரும், கிளிநொச்சியில் 836 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திலும் தொடர்ச்சியாக பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாளங்களில் பெய்த மழை காரணமாக குளங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் நேற்றைய தினம் 19.8 அங்குலமாக இருந்த நிலையில் இன்று 26 அங்குலமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கிளிநொச்சி கனகாம்பிகை குளம் வான்பாய்ந்து வருகின்றமையால் கிளிநாச்சி ஆனந்தபுரம் கிழக்கும் மற்றும் இரத்தினபுரம் ஆகிய பகுதிகளில் மக்கள் குடியிருப்புகள் சிலவற்றினுள் வெள்ளம் உட்சென்றுள்ளது. இதன் காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்கு உடனடி உணவுகள் வழங்கப்பட்டு வருவதுடன் சிறுவர்கள் பெண்கள் வயதானவர்களை படையினர் மீட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தொடர்ச்சியாக வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் முறையான வடிகால் வசதி இன்மையால் இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதற்குரிய உரிய சரியான தீர்வினை பெற்று தருமாறு கிளிநாச்சி ஆனந்தபுரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க