முத்தையா முரளிதரனுக்கு தமிழர் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக்கள்!

206shares

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனை இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை வலியுறுத்திவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளை கடுமையாக விமர்சித்திருந்த சிறிலங்கா கிறிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு தமிழர் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக்கள் எழுந்திருக்கின்றன.

எனினும் சிறிலங்காவின் அரசியல் தலைவர்கள் ஜனநாயகத்திற்காக குரல்கொடுப்பதை விடுத்து மக்களின் உணவு உள்ளிட்ட அவர்களது அன்றாடத் தேவைகளை பெற்றுக்கொடுக்க ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என முத்தையா முரளிதரன் வெளியிட்ட கருத்தை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பாராட்டியுள்ளார்.

சிறிலங்காவிலுள்ள அனைவருக்கும் முத்தையா முரளிதரனின் கருத்து உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கோட்டாபய ராஜபக்ச தனது சமூக வலைத்தளத்தில் இட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பி.பி.சி செய்தி சேவைக்கு வழங்கியிருந்த செவ்வியில் கருத்து வெளியிட்டிருந்த பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், வடக்கின் அரசியல்வாதிகள் உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பில் பேசுகின்ற போதிலும், மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து கரிசனை கொள்வதில்லை என்று பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

எனினும் மக்கள் தமது பிரதிநிதிகளை நாடாளுமன்றம் அனுப்புவது அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கே அன்றி ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு அல்லவென்றும் முரளிதரன் கூறியிருந்தார்.

“உரிமைகள், முன்னர் நடந்த விடயங்கள், ஜனநாயகம் குறித்து தமிழ் அரசியல் தலைவர்கள் குறிப்பிடுகின்றனர். கிளிநொச்சியில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை கூறுகின்றேன். ஒன்பது வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆடை இல்லாத பிரச்சினையே அதற்கு காரணம். அந்த குடும்பத்தில் மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். ஒருவருக்கு 12 வயது, ஏனையவர்களுக்கு 9 வயது 7 வயது. தந்தையின் நாளாந்த கூலி 200 ரூபா. தாயே அவர்களை பார்க்க வேண்டும். மிகவும் கஷ்டப்பட்டே ஒருவேளை உணவை உண்கின்றனர். மூவரையும் பாடசாலைக்கு அனுப்புகின்றனர். ஆடைகள் பழுதடைந்துள்ளது. பாடசாலை சீருடையை பெற்ற பின்னர் அதனை தைப்பதற்கு 200 ரூபா வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. அதற்கு பணம் இல்லை. இதனை பார்த்து விட்டு இந்த சிறுமி இறுதியில் தற்கொலை செய்துள்ளார். அதனைப் பார்ப்பதற்கு ஒருவர்கூட இல்லை. யாருக்கும் தெரியவும் இல்லை. அந்த தாய் அழுகின்றார். ஒரு அரசியல்வாதிகள் கூட இதனைப் பார்ப்பதற்கு இல்லை. அந்த பிள்ளைக்கு மூன்று நேரமும் உணவு அளிப்பதே அவசியம். அதன்பின்னர் கல்வியை ஊட்டுவது. அதுவே அடிப்படைகள். இந்த நாட்டில் 70 வீதமானவர்கள் இவ்வாறே வாழ்க்கை நடத்துகின்றனர். மிகவும் சிரமப்பட்டே வாழ்க்கை நடத்துகின்றனர். கொழும்பிலுள்ள செல்வந்தர்களுக்கு இது தெரிவதில்லை. இந்த நாட்டில் ஜனநாயகத்தை விட இதனையே முதலில் பார்க்க வேண்டியது அவசியம். மக்கள் என்னை தூற்றக்கூடும். ஜனநாயகம், சட்டம் அவை இரண்டாவது பட்சம். சட்டமொன்று இருக்கின்றது. ஜனநாயகம் இருக்கின்றது. தேவைப்பட்டவாறு மாற்றிக்கொள்ள முடியும். சிறந்த சட்டத்தரணிகள் இருக்கின்றனர். தவறு செய்தால் கூட அவர்களால் தண்டனையில் இருந்து தப்ப வைக்க முடியும். ஓட்டைகள் இருக்கின்றன.பணம் இருந்தால் இந்த நாட்டில் எதைவேண்டுமானாலும் செய்யலாம். மக்களின் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே மக்கள் பிரதிநிதிகள் அந்தந்த மாகாணத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு அனுப்படுகின்றனர்.ஜனநாயகத்தை பெற்றுத்தருமாறு அம்மக்கள் கோருவதில்லை. எங்கு மூன்று நேர சாப்பாடு என்றே அவர்கள் கேட்கின்றனர். கல்வியை பெறுவதற்கு பாடசாலை செல்வது குறித்தே அவர்கள் கேட்கின்றனர். வடக்குக்கு என்று என்ன அரசியல் தீர்வொன்றை எவ்வாறு வழங்க முடியும் என்று எனக்கு கூறுங்கள்.நான் தமிழன். நீங்கள் முஸ்லீம். அனைவரும் இருக்கின்றனர். நாம் அனைவரும் மனிதர்கள்.என்னை வெட்டினாலும் இரத்தம் தான் ஓடும். அவர்களுக்கு வெட்டினாலும் இரத்தமே வரும். என்னைப் பொறுத்தவரை இது காலம் காலாமாக உருவாக்கப்பட்ட ஒன்று.

முத்தையா முரளிதரனின் இந்த கூற்றுக்கள் தொடர்பில் தமிழ் தரப்பு கடும் விமர்சனத்தை வெளியிட்டு வருகின்றது.

நல்லாட்சி அரசாங்கத்தின் தேசிய சகவாழ்வு அமைச்சரான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஜனநாயகத்தை விட மூன்று வேளை உணவே தேவையானது என சமூக உணர்வற்ற முட்டாளே கூறுவார் என விமர்சித்துள்ளார்.

தனது டுவிட்டர் பதவியில் முத்தையா முரளிதரனுக்கு மறைமுகமாக மனோ கணேசன் இவ்வாறான பதிலை வழங்கியுள்ளார்.

இதேவேளை முத்தையா முரளிதரனின் கருத்து குறித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருக்கின்றார்.

இனப்படுகொலை மற்றும் யுத்தக் குற்றங்களை புரிந்த ராஜபக்சக்களை ஆதரிக்கும் வகையில் முத்தையா முரளிதனின் கருத்து அமைந்துள்ளதாக குறிப்பிடும் செல்வராசா கஜேந்திரன், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமாயின் தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழ் மக்களின் பெயரில் வெளிநாட்டு உதவிகளை பெறும் ஸ்ரீலங்கா அரசாங்கம், அவற்றை உரிய முறையில் அவர்களுக்கு கொண்டு சேர்ப்பதில்லை எனவும் அவர் சாடியுள்ளார்.

இதேவேளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் முத்தையா முரளிதரனின் கருத்தை வரவேற்று சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளமை குறித்தும் செல்வராசா கஜேந்திரன் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

இதேவேளை தமிழர் தரப்பினர் மாத்திரமன்றி ஜனநாயகத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் குரல்கொடுத்துவரும் சிங்கள தரப்பினரும் முத்தையா முரளிதரனின் கூற்றுகளுக்கு கண்டனத்தை வெளியிட்டு வருகின்றனர்.

மைத்ரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சீபீடம் ஏற்றுவதற்கு உழைத்த புரவெசி பலய என்ற பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் முக்கிய உறுப்பினரான கொழும்பு பல்கலைக்கழகத்தின் வரலாற்று கற்கை பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி நிர்மால் ரஞ்சித், வடக்கு மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் போது அவை சாதாரண தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தாத பிரபுக்களின் கருத்துக்கள் என சிலர் கூறுகின்றனர்.

எனினும் சிக்கலான அரசியல் பிரச்சனைகள் தொடர்பில் எந்தவித புரிதலும்இல்லாத முத்தையா முரளிதரன், இது சிங்கள பௌத்த நாடு என்று கூறும் போது அதோ உண்மையான தமிழ் மக்களின் நிலைப்பாடு என்று கூறி வாழ்த்துத் தெரிவிக்கின்றனர் என்றும் நிர்மல் ரஞ்சித் விசனம் வெளியிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க