சுமந்திரன் ரணிலின் விசுவாசியாம்: அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க!

29shares

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக சுமந்திரன் கூறும் கருத்துக்கள் அமையாது என்று தெரிவித்துள்ள மைத்ரி – மஹிந்த அரசாங்கத்தின் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திஸாநாயக்க, சுமந்திரன் ரணிலின் விசுவாசி என குற்றம்சாட்டினார்.

அதேவேளை மஹிந்தவை பிரதமராக்கியதன் ஊடாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உருவாக்கியுள்ள புதிய அரசாங்கம் 2025 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் நீடிக்கும் என்றும் எஸ்.பீ குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலொன்றை நடத்த மைத்ரி - மஹிந்த அணி திட்டமிட்டு வருவதாக வெளியான தகவல்களையும் நிராகரித்த எஸ்.பீ. திஸாநாயக்க நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு சர்வஜன வாக்கெடுப்பிற்கோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலொன்றை நடத்தப் போவதில்லை என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் என்பவரை தமிழ் தேசியக் கூட்மைப்பாக கருத முடியாது என்று தெரிவித்த எஸ்.பீ. அவர் தமிழ் தேசியக் கூடட்மைப்பின் உறுப்பினர் ஒருவர் மாத்திரமே என்றும் தெரிவித்தார்.

சுமந்திரன் அடுத்த தடவை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்படுவார் என்றும் கூறியுள்ள அவர், தமக்கு தேவையான பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டுமானால் முஸ்லீம் காங்கிரஸைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும், ரிசாட் பதியூதீனின் கட்சியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தம்முடன் இணைத்துக்கொள்வதாகவும் சூளுரைத்துள்ளார்.

இதற்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் பலம்வாய்ந்த ஆட்சியை முன்னெடுத்துச்செல்வோம் குறிப்பிட்டுள்ள எஸ்.பீ முதலில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறினார். அடுத்ததாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு இறுதியாகவே பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்த அவர் இதற்கமைய மஹிந்த – மைத்ரி தலைமையிலான புதிய அரசாங்கத்தை எந்தவித தடையும் இன்றி 2025 ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக முன்னெடுத்துசெல்வோம் என்றும் குறிப்பிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க