காணி விடுவிப்பு தொடர்பில் பிழையான தரவுகளை மைத்திரி அரசு வெளிடுவதாக சிறிதரன் சாடல்!

25shares

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பு தரப்பினர் வசமிருந்த 90 வீதமான அரச காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மைத்திரி - மஹிந்த அரசாங்கம் இன்றைய தினம் அறிவித்துள்ளது. எனினும் இந்த கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஐ.பீ.சீ தமிழுக்குத் தெரிவித்தார்.

போரால் பேரழிவை சந்தித்த வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை துரிதப்படுத்தி அந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கையை வளப்படுத்துவதற்காக சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவினால் கடந்த ஒகஸ்ட் மாதம் ஏற்படுத்தப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணியின் நான்காவது அமர்வு இன்றைய தினம் (11.08.2018) இடம்பெற்றது.

சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த அமர்வில் கருத்துத் தெரிவித்த மைத்ரி, கடந்த இரண்டு மாத காலமாக இச்செயலணி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மிகவும் மும்முரமாக செயற்பட்டு வருவதுடன், அந்த நடவடிக்கைகள் சிறந்த முன்னேற்றம் கண்டிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் முன்னெடுக்க்படும் நிகழ்ச்சித் திட்டங்களை மிகவும் பலமாக எதிர்காலத்திலும் நடைமுறைப்படுத்தவுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இதற்கான பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒன்றுபடுமாறு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்வற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தேவையான வசதிகளை விரிவுபடுத்தல் கைத்தொழில் துறையை முன்னேற்றுவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பு படையினரின் பொறுப்பிலுள்ள காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

அந்தவகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பு படையினரின் பொறுப்பிலிருந்த அரசாங்க காணிகளில் 79.01 சதவீதமும் தனியாருக்கு சொந்தமான காணிகளில் 90.02 சதவீதமான காணிகளும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பினால் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த புள்ளிவிபரங்களை முற்றாக நிராகரித்த யாழ் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இன்று நடைபெற்ற கூட்டமும் எந்தவொரு தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் ஒன்றாக இருக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.

இதையும் தவறாமல் படிங்க