சபாநாயகர் கருஜயசூரியவின் திடீர் மாற்றத்திற்கு காரணம் வயோதிபமா? மிரட்டலா? புலனாய்வு செய்யும் அமைச்சர்!

261shares

சபாநாயகர் கரு ஜயசூரிய பக்கச்சார்பாக செயற்பட்டு வருகிறாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அது குறித்து மைத்திரி – மஹிந்த தலைமையிலான புதிய அரசு ஆராய்ந்து வருவதாக அரசின் பங்காளிக் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கண்டியில் குண்டசாலையில் அமைந்துள்ள விவசாயக் கல்லூரியில் நடைபெற்ற சான்றிதழ் அளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக விவசாய அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளருமான மஹிந்த அமரவீர கலந்துகொண்டிருந்தார்.

விவசாய டிப்ளோமாவை நிறைவுசெய்த மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை வழங்கிவைத்த அமைச்சர் மஹிந்த அமரவீர, ஊடகங்களுக்கு சமகால அரசியல் நிலைமை குறித்து கருத்து வெளியிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு பிரதமராக மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தமையானது அரசியலமைப்பிற்கு முரணான செயல் என்று ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் அதேபோல சிவில் அமைப்புக்களும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன.

எனினும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர, ஜனாதிபதியின் இந்தத் தீர்மானமானது முற்றுமுழுதாக அரசியலமைப்பிற்கு உட்பட்டதாகவே காணப்படுவதாகவும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், அரசியலமைப்பின்படி புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய இவர் செயற்பட்டு வருகின்றார். அமைச்சரவையும் நியமிக்கப்பட்டு வருகின்றது. இன்னும் இரண்டு தினங்களில் முழு அமைச்சரவையும் பூரணப்படுத்தப்படும். 30 பேர் கொண்ட அமைச்சரவை இருக்கும்.

புதிய பிரதமர் நியமனத்தின் பிரகாரமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் தேசிய அரசிலிருந்து விலகுவதாக கடிதம் மூலம் அறிவித்தேன். 45 அமைச்சர்களைக் கொண்ட அப்போதைய அமைச்சரவை 30க்கு வரையறுக்கப்பட்டதோடு பிரதமர் பதவியும் வெற்றிடமாகியது. அதன் பின்னர் புதிய பிரதமரை அரசியலமைப்பின் படி நியமித்தார். எனவே எமக்கு போதுமான பெரும்பான்மை இருக்கின்றது எனத் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதியின் இந்த அதிரடி அரசியல் தீர்மானமானது அரசியலமைப்பிற்கு முரணானது என்பதை தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, புதிய பிரதமரது நியமனத்தை சபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றும் அறிக்கை ஊடாக திட்டவட்டமாக குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர, சபாநாயகர் பக்கச்சார்பாக செயற்படுவதாக சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்.

அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்துத் தெரிவிக்கையில், சபாநாயகரது செயற்பாடு குறித்து கவலையடைகிறோம். கடந்த காலங்களில் சபாநாயகர் மீது ஒரு கௌரவம் இருந்த போதிலும் இப்போது அது மறைந்துபோகிறது. அப்போதிருந்த சபாநாயகரா இப்போது இருக்கிறார் என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

அவரை இதற்கு முன்னர் சந்தித்தபோது இந்த நியமனம் அரசியலமைப்பு சார்ந்தது என்றும், ஜனாதிபதியின் வர்த்தமானியின் பிரகாரம் செயற்படுவதாகவும், புதிய பிரதமருக்கான வசதி ஏற்பாடுகளை செய்வதாகவும் கூறியிருந்தார். இருந்த போதிலும் அவர் ஒரே கணத்தில் மாற்றமடைந்துவிட்டார். அதற்கான காரணம்தான் என்ன? இந்த மாற்றத்திற்கான காரணம் குறித்து நாமும் தேடுகிறோம்.

அவரது வயோதிப நிலையா அல்லது வெளியிருந்து வந்த அச்சுறுத்தலா இதற்கு காரணம் என்று குறித்து ஆராய்கிறோம். எவ்வாறாயினும் ஜனாதிபதியின் தீர்மானத்தை எவராலும் விமர்சிக்க முடியாது. இதுவரைக்கும் புதிய பிரதமரின் நியமனம் குறித்து எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. குறிப்பாக சர்வமதத் தலைவர்களும்கூட இதற்கு எதிராக கருத்து வெளியிடவும் இல்லை எனத் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க