சபாநாயகரை துன்புறுத்த மஹிந்தவாதிகள் திட்டம் போட்டிருந்தனர்; நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட தகவல்!

55shares

சபாநாயகர் கரு ஜயசூரியவை தாக்கி அவரை துன்புறுத்த மஹிந்தவின் விசுவாசிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிரமாக முயற்சித்ததாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது..

நாட்டின் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் மீறி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது விசுவாசிகள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிக்கொள்ளும் சதித்திட்டத்தின் மற்றுமொரு அங்கமாகவே இன்றைய இந்த சம்பவமும் இடம்பெற்றதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.

எனினும் இதனை நிராகரிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜயசேகர, மோதல்கள் வெடித்த போது சபாநாயகர் அவையை விட்டு வெளியேறாமல் தொடர்ந்தும் அங்கேயே அமர்ந்திருந்ததாலேயே இந்த நிலை ஏற்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

குழப்பங்கள் வெடித்ததும் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துவிட்டு சபாநாயகர் கரு ஜயசூரிய வெளியேறியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று தெரிவித்துள்ள தயாசிறி ஜயசேகர, அதனால் இன்றைய துர்பாக்கியமான சம்பவங்கள் அனைத்திற்கும் சபாநாயகரே முழுப் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் கடுமையாக சாடியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூரிய ஆயுதங்களையும் அவைக்குள் கொண்டுவந்திருந்ததாகவும் மைத்ரி – மஹிந்த அரசாங்கத்தின் அமைச்சராக இருக்கும் தயாசிறி ஜயசேகர மற்றுமொரு பாரதூரமான குற்றச்சாட்டொன்றையும் முன்வைத்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க