மைத்ரிபால தொடர்ந்தும் தவறிழைப்பாரானால் இதுதான் நடக்கும்; எச்சரிக்கும் ராஜித!

69shares

ஸ்ரீலங்காவின் மூலச் சட்டமான அரசியல் சசானத்தை மீறி செயற்பட்டுவரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது தவறுகளை திருத்திக்கொள்ளாது தொடர்ந்தும் தவறிழைப்பாரானால், மக்கள் புரட்சியின் ஊடாக அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று ஐக்கிய தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன கடுமையான எச்சரிக்கையொன்றை விடுத்திருக்கின்றார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலளார் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ராஜித சேனாரத்ன, மைத்ரிபால சிறிசேன, அரசியலமைப்பில் இல்லாத அதிகாரங்களையும் பயன்படுத்தி வருவதால், நாட்டில் இதுவரை காலமும் ஆட்சியில் இருந்த நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிகளை விட மிக மோசமான ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவும், அவரது விசுவாசிகளும் அரசாங்கத்தில் வகித்த பதவிகளில் தொடர முடியாது என்று தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்றைய தினம் வழங்கிய இடைக்கால தடை உத்தரவை அடுத்து ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களை சந்தித்திருந்த சிறிலங்கா ஜனாதிபதி, ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் என்று மீண்டும் திட்டவட்டமாக அறிவித்தார்.

இதனால் ஒக்டோபர் 26 ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழப்பம் தீர்வின்றி தொடர்கின்றது.

இந்த நிலையில் நீதிமன்றங்களினால் அடுத்தடுத்து வழங்கப்பட்டள்ள தீர்ப்புகளுக்கு மதிப்பளித்து தீர்வொன்றை வழங்காது ஜனாதிபதி தொடர்ந்தும் இழுத்தடித்தால், மக்கள் பலத்தை கொண்டு அரசாங்கத்தை கைப்பற்றுவோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன எச்சரிக்கை விடுத்தார்.

ராஜித சேனாரத்ன - “இந்த விடயத்தில் கடும் நடவடிக்கை எடுப்பதற்கான வழிமுறைகள் ஐக்கிய தேசிய முன்னணியிடம் காணப்படுகின்றது. எனினும் நீதிமன்றத்தில் இந்த விடயம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என, எமது சட்டத்தரணிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அந்த விசாரணைகள் அடுத்த வாரமளவில் நிறைவடைந்தவுடன் பொதுமக்களின் பலத்தினை காட்டுவோம். ஜனாதிபதியின் பலத்தினை விட மக்கள் பலம் பலமானது. இந்த நாட்டில் இன்று அரசாங்கம் ஒன்று இல்லை என்பது பாதுகாப்பு படைகள் முதல் அனைவருக்கும் தெரியும். உண்மையான அரசாங்கம் எது என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும். நாட்டு மக்களுடன் இணைந்து நாங்கள் வருவோம். அரசாங்கத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதை காட்டுவோம். ஜனாநாயகத்துக்கும் எல்லை உண்டு. ஜனநாயகம் எல்லை மீறிச் செல்லும் சந்தரப்பங்களும் உண்டு. அதுதான் பொதுமக்கள் புரட்சி. இவர்களை விட பெரிய ஆட்சியாளர்களையும் மக்கள் பலம் வீழத்தியிருக்கின்றது. அதற்கமைய இந்த விடயம் எமக்கு ஒன்றும் பெரிது இல்லை. அந்த நிலைக்கு நாட்டை தள்ளாமல் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

2015ஆம் ஆண்டு அவரை நாம் பதவிக்குகொண்டு வந்தது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்துவதற்காக அல்ல. அதனை இல்லாது செய்வதற்கே. அதற்கான வாக்குறுதியை சோபி்த தேரரின் பூதவுடலுக்கு முன்னால் ஜனாதிபதி வழங்கினார். நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு வந்தவர், ஜே.ஆர்.ஜயவர்தன முதல் மஹிந்த ராஜபக்ஸ வரையிலான ஜனாதிபதிகள் பயன்படுத்தாத நிறைவேற்று அதிகாரங்கள் மற்றும் அரசியலமைப்பில் இல்லாத அதிகாரங்களை மைத்திரிபால சிறிசேன பயன்படுத்துகின்றார். இது குறித்து அவர் வெட்கப்படவேண்டும்”.

இதேவேளை மஹிந்தவும் அவரது விசுவாசிகளும் பிரதமர் மற்றும் அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்றைய தினம் வழங்கிய இடைக்கால தடை உத்தரவை அடுத்து நாட்டில் அரசாங்கமொன்று இல்லாத நிலையொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

எனினும் இன்றைய தினம் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களை அழைத்துள்ள சிறிலங்கா ஜனாதிபதி, அந்த அமைச்சுகளின் செயலாளர்கள் ஊடாக அனைத்து அமைச்சுப் பணிகளையும் முன்னெடுக்க உத்தரவிட்டிருப்பதாக குறிப்பிட்ட ராஜித்த, மைத்ரியின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் கூறினார்.

“சட்டவிரோத அரசுக்கு எதிராக இரண்டு தடை உத்தரவுகளை நீதிமன்றங்கள் வழங்கியிருக்கின்றன. நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளதுடன், உலக வரலாற்றில் முதல் முறையாக பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் அவர்களது கடமைகளை வகிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று பிரதமர் மற்றும் எந்தவொரு அமைச்சரரும் ஸ்ரீலங்காவில் இல்லை. இன்றையதினம் ஸ்ரீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன அமைச்சுக்களின் செயலாளர்களை அழைத்து அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லுமாறு உத்தரவிடுவின்றார். அதனை செய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை. செயலாளர்களை நியமிக்க ஜனாதிக்கு அதிகாரம் இருந்தாலும் அவர்கள் ஊடாக அமைச்சு பணிகளை முன்னெடுக்க அதிகாரம் வழங்கப்பவில்லை”.

எவ்வாறாயினும் ஒக்டோபர் 26 ஆம் திகதி ஒருவாக்கப்பட்ட அரசியல் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ஐக்கிய தேசிய முன்னணி உட்பட அனைத்துத் தரப்பினராலும் நாடாளுமன்றில் பெரும்பான்மையை கொண்டிருக்கும் ஒருவரை பிரதமராக்குமாறு சிறிலங்கா ஜனாதிபதியை வலியுறுத்தி வருகின்றனர்.

ரணில் விக்கிரமசிங்கவையே பிரதமராக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய முன்னணியும் பரிந்துரைத்துள்ளது. நேற்றைய தினம் ஜனாதிபதியுடன் நடத்திய சந்திப்பின் போதும் இதனை அந்த முன்னணியின் பங்காளிக் கட்சிகள் வலியுறுத்தின. எனினும் இதனை நிராகரித்துள்ள மைத்ரி, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டு கொடுத்தாலும் ரணிலை பிரதமராக்க போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

இவ்வாறு கூறுவதற்கு மைத்ரிக்கு அரசியல் சாசனத்தில் அனுமதி இல்லை என்று குறிப்பிடும் ஐக்கிய தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த, ரணில் பிரதமரானால் தான் பதவியிலிருந்து வெளியேறுவேன் என்று குறிப்பிட்டிருப்பதால் அவர் வேண்டுமானால் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகட்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றார்.

“நேற்று நீதிமன்றம் வழங்கிய தடையுத்தரவில் அரசியல் அமைப்புக்கு உட்பட்ட விதத்தில் பெரும்பான்மையுடைய பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளது என குறிப்பிட்டப்பட்டுள்ளது. இதனை நான் நேற்று ஜனாதிபதி முன்னிலையில் வாசித்து காட்டினேன். நல்லாட்சி அரசாங்கம் பெற்றுக்கொண்ட பாரிய வெற்றி இதுவென்று அவரிடம் நான் குறிப்பிட்டேன்.

நிறைவேற்று அதிகாரம் மற்றும் அதிகாரங்கள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள விளக்கமானது முக்கியமான ஒன்று. ஜனாதிபதிக்கு எந்தவித அதிகாரங்களும் இல்லை. பிரதமரை தெரிவுசெய்வதற்காக அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. அந்த அதிகாரமானது நாடாளுமன்றத்துக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரத்திடம் இருந்த அதிகளவான அதிகாரங்கள் அரசியலமைப்பு ஊடாக நாடாளுமன்றத்துக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுவிட்டன.

மக்கள் வாக்குகளில் தெரிவான உறுப்பினர்களே பிரதமரை தெரிவுசெய்துகொள்வார்கள். தனிப்பட்ட நபரால் அல்ல. எனினும் ரணிலை பிரதமராக நியமித்தால் தன்னால் செயற்படமுடியாது என்று ஜனாதிபதி இப்போதும் கூறுகின்றார். அவ்வாறான ஒன்று அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை. இந்த விடயத்தில் உறுதியாக இருந்தால் தான் விலகுவதாக ஜனாதிபதி கூறுக்கின்றார். அது அவருடய தீர்மானம். எங்களுடையது அல்ல அரசியலமைபின்படி அது தொடர்பான தீர்மானத்தை அவரால் மாத்திரம் எடுக்கமுடியும். அவருக்கு எதிரான குற்றப்பிரேரணையை கொண்டுவந்தால் மாத்திரமே எம்மால் அவரை பதவிநீக்கமுடியும்”.

ஒக்டோபர் 26 ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழப்பங்கள் காரணமாக நாடு அனைத்து துறைகளிலும் பெரும் பின்னடை சந்தித்துள்ளதாக கவலை வெளியிட்ட ராஜித்த சேனாரத்ன, இந்த நிலை தொடர்ந்தால் நாடு பேரழிவை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

நாடு இன்று எதிர்நோக்கியுள்ள இந்த மோசமான நிலமைகளை கருத்தில் கொள்ளாமல் மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் செயற்படுவாரானால், ரோம் மன்னன் நீரோவை போல வரலாற்றில் தூற்றப்படும் நிலைக்கு மைத்ரி தள்ளப்படுவார் என்றும் ராஜித்த சேனாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“இந்த பிரச்சினைக்கு ஜேர்மனி மற்றும் இத்தாலியை ஜனாதிபதி உதாரணம் காட்டுகின்றார். இத்தாலியில் ஒரு மாதத்தின் பின்னர் ஆட்சியை உலக வங்கி, விசேட நிபுணர்களிடம் ஒப்படைத்தது. அது தொடர்பான தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றில் எடுக்கப்பட்டது. தேர்தலில் ஊடாக மற்றுமொருவர் பதவிகே்கு வரும் வரை அரசாங்கம் இல்லாமல் சுமார் ஆறுமாதங்கள் அந்த நிலை நீடித்ததது. அதற்காக சட்ட ஏற்பாடுகள் அந்நாட்டு அரசியலமைப்பில் காணப்பட்டன. அந்நாட்டில் அமைச்ச்கள் பெரதாக செய்யக்கூடிய விடயங்கள் இருக்கவில்லை. எனினும் ஸ்ரீலங்காவில் அமைச்சரின் தீர்மானம் இல்லாமல் அமைச்சின் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. இதன்காரணமாக பாரிய பிரச்சினைக்கு நாடு முகங்கொடுத்துள்ளது. மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கண்டி வைத்தியசாலையில் புற்றுநோய்கான மருந்துகள் நேற்றுடன் நிறைவடைந்துவிட்டன. இவர்கள் பாரிய தவறு செய்கின்றனர். சிறப்பாக முன்னேறிய நாடு இன்று பின்னோக்கி செல்கினறது. புற்றுநோயக்கு மருந்துகள் இல்லையொன்றால் தனியாரிடம் கொள்வனவு செய்ய மக்களுக்கு வருமானம் இல்லை ஊசியொன்று 1 இலட்சம் ரூபாய்க்கு அதிக விலையில் விற்க்கப்படுகின்றது. அவர்களுக்கு நோயக் எதிர்ப்பு சக்தியை பெற்றுக்கொடுக்கும் மருந்துகளும் இன்று இல்லை. இந்த நிலை நீடித்தால் இன்றும் சிறிது காலத்தில் உணவு இல்லாமல் போகும். ஜனாதிபதி தனக்கு தோதான பிரதமரை தேடிககொண்டிருப்பார். வரலாற்றில் இரண்டாவதாக நபராக ஜனாதிபதி மைத்திரிபால இடம்பிடித்துள்ளார். ரோம் நகரம் பற்றியெறிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்து கொண்டிருந்தார். அதனை போலவே மைத்திரி செயற்படுகின்றார். நாட்டின் பிரச்சினையை தீர்ப்பதை விடுத்து கட்சி மாநாட்டை நடத்திக்கொண்டிருக்கின்றார். அவரின் பேச்சை கேட்டு நாடு கட்டியெழுப்படும் என்று நினைக்கின்றார். அவரின் பேச்சை மக்கள் கேட்டால் அவர்கள்தான் அங்கிருந்து ஓடுவார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க