ஜனாதிபதி தொடர்ந்தும் அரசியல் யாப்பை மீறி வருகின்றார்: ரிசாட் காட்டம்!

15shares

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர் நாட்டில் அமைச்சரவை ஒன்று இல்லாத நிலையில், அமைச்சர்களின் பொறுப்புக்களை அமைச்சின் செயலாளர்கள் ஏற்று நடக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய முன்னணி, இந்த விடயமும் அரசியல் சாசனத்திற்கு முரணானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

அருகில் இருப்பவர்களின் தவறான வழிகாட்டுதல்கள் காரணமான, யாப்பினை மீறி பல தீர்மானங்களை, ஜனாதிபதி மைத்திரிபால, சிறிசேன மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கடுமையாக சாடியிருக்கின்றார்.

அலரி மாளிகையில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் ரிஷாட் பதியுதீன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா ஜனாதிபதியினால் கடந்த ஒக்டோபர் 26 -ஆம் திகதி புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவைக்கு அந்தப் பதவிகளில் இருப்பதற்கு சட்டத்தின் அதிகாரம் இல்லை என்று தெரிவித்து நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை உத்தரவை அடுத்து நாட்டில் அரசாங்கமொன்று இல்லாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் இன்று சகல அமைச்சுக்களினதும் செயலாளர்களை அவசரமாக ஜனாதிபதி செயலகத்திற்க அழைத்த சிறிலங்காவின் அரச தலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அவர்களுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ள நிலையில், பொதுச்சேவைகள் முடங்கக் கூடாது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய அரச பணிகள் எவ்வித தடைகளுமின்றி தொடர்ச்சியாக நிறைவேற்றுவதற்கு தேவையான ஆலோசனைகளும், அதற்கான கட்டளைகளையும் சகல அமைச்சுக்களினதும் செயலாளர்களுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

எனினும் ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று குற்றம்சாட்டிய ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன், அமைச்சரவை ஒன்று இல்லாத நிலையில், அமைச்சுகளின் செயலாளர்கள் மாத்திரம் எவ்வாறு செயற்பட முடியுமென கேள்வி எழுப்பியுள்ளார்.

ரிஷாட் பதியுதீன் – “கடந்த 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன தோல்வியடைய வேண்டுமென பணியாற்றியவர்களே இன்று அவர் பக்கத்தில் இருக்கின்றனர். அவர்கள் இன்று ஜனாதிபதிக்கு தவறான வழிகாட்டுதல்களை வழங்கி அரசியல் யாப்பினை மீறி செயற்பட வைத்துள்ளனர். மைத்திரிபால சிறிசேன இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க பதவியில் இருக்கும்போது மஹிந்தவை அழைத்து புதிய பிரதமரை நியமித்தார். நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு அவருக்கு அதிகாரம் இல்லையெனத் தெரிந்தும் நாடாளுமன்றத்தை கலைத்தார். அதுவும் அரசியல் யாப்பினை மீறும் செயல். அதுவும் அவருடன் இருப்பவர்களின் பிழையான வழிகாட்டுதலுடனேயே நடைபெற்றது.

நேற்றைய தினம் முன்முறையீட்டு நீதமன்றத்தின் தீர்ப்பினை அடுத்து அமைச்சரவை இல்லாமல் போயுள்ளது. அமைச்சரவை ஒன்று இல்லாத சந்தர்ப்பத்தில் அமைச்சர்களின் செயலாளர்களும் பதவி இழந்துள்ளனர். எனினும் செயலாளர்கள் இன்றும் பணயாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். ஜனாதிபதியும் அவர்களை பணியாற்றுமாறு பணிப்புரை விடுக்கின்றார். அதுவும் அரசியல் யாப்பினை மீறும் செயலே. அனைத்தையும் தெரிந்துகொண்டு ஜனாதிபதி மீண்டும் மீண்டும் ஏன் தவறிழைக்கின்றார் என எங்களுக்குத் தெரியாமல் இருக்கின்றது.

ஜனாதிபதிக்கு விருப்பமானவரை பிரதமர் பதவியில் அமர்த்துமாறு யாப்பில் குறிப்பிடப்படவில்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ள ஒருவரே பிரதமராக வரமுடியுமென யாப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இனியாவது தவறுகளை திருத்திக்கொண்டு ஜனாதிபதி செயற்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க