மஹிந்தவாதி அம்பலப்படுத்திய யானை-புலி ஒப்பந்தம்!

118shares

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் செயற்பாட்டில் இருந்த காலத்தில், அந்த அமைப்பின் அரசியல் பிரிவாக செயற்ட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று புலிகள் அமைப்பின் செயற்பாடுகள் இல்லாத நிலையில், அந்த அமைப்பின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் செயற்படுவதாக, மஹிந்தவாதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆதரவு தெரிவித்ததன் பின்னணியில், ஐக்கிய தேசியக் கட்சியுடன், இணக்கப்பாடு ஒன்று ஏற்பட்டமை தெளிவாவதாகவும், ஆகவே அந்த இணக்கப்பாட்டின் உள்ளடக்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு ஒன்று, பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில், அந்தக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரமான உதய கம்மன்பில இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராகக் கொண்ட அமைச்சரவை ஒன்றை அமைப்பதற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்குமெனவும் சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், கடந்த 29ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்த தமிழ்க் கூட்டமைப்பு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ள தரப்புக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பை வழங்குமாறு அந்த கடிதத்தின் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த விடயத்தை சுட்டிக்காட்டிய, உதய கம்மன்பில இந்த இணக்கப்பாட்டின் பின்னணியில், ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இணக்கப்பாடு ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தான் அடையாளப்படுத்துவதற்கு ஆதாரமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிக் தலைவர் இரா.சம்பந்தன், புலிகள் அமைப்பின் தலைவர், வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்டவர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் காண்பித்தார்.

கடந்த ஒருமாத காலமாக, மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாகவும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கு ஆதரவளிக்கப்போவது இல்லை எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஒருமாதகாலமாக கருத்து வெளியிட்டு வந்தது.

எனினும் தற்போது பிரதமர் பதவியில் ரணிலை அமர்த்துவதற்கு ஆதரவு வழங்குவதாக தற்போது தெரிவித்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வருவதற்கு என்ன காரணம்? ஐக்கிய தேசியக் கூட்டமைப்பிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இணக்கப்பாடு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதனை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். 2011ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் காலத்தில், ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட, 'யானை - புலி" ஒப்பந்தத்தின் மூலம், தனித் தமிழீழத்திற்கான எல்லை நிர்ணயிக்கப்பட்டது. இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டன.

புலனாய்வாளர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளானார்கள். 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்த்திற்கு அமைய, இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டன, புலி சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். புலனாய்வாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

இவ்வாறு 'யானை - புலி" ஒப்பந்தத்தால் மூன்றாவது முறையாகவும் பாதிப்பினை எதிர்நோக்க நாட்டு மக்கள் தயாரில்லை. ஆகவே ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழ்க் கூட்டமைப்பிற்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் இந்த நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் செயற்பாட்டில் இருந்த காலத்தில், அந்த அமைப்பின் அரசியல் பிரிவாக செயற்ட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று அந்த அமைப்பின் செயற்பாடுகள் இல்லாத நிலையில், அந்த அமைப்பின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் செயற்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க