யாழ் மக்களின் வறுமையை ஒழிக்க தவறிய வடமாகாண சபை! ஒப்புக்கொண்ட ஆர்னோல்ட்!

24shares

யாழ்.மாவட்ட மக்களின் வறுமையைப் போக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வடமாகாண சபை தவறிவிட்டதாக கனடா உயர்ஸ்தானிகரிடம் யாழ்.மாநரக முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மக்னே யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோலட்டை மாநகர சபையில் இன்று (06) சந்தித்து கலந்துரையாடினார்.

அந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

யாழிற்கு வருகை தந்த கனடா உயர்ஸ்தானிகர் யாழ்.மாவட்ட மக்களின் வறுமை நிலை எவ்வாறு இருக்கின்றதென கேள்வி எழுப்பியிருந்தார்.

வடமாகாண சபை இருந்த போது, மிக அக்கறையுடன் வறுமை நிலை தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்திருக்க வேண்டும். அதில் தவறிழைத்துவிட்டோம். மாநகர மக்களின் வறுமை நிலையைப் போக்குவதற்கு பொருளாதார ரீதியில் வளர்த்தெடுப்பதற்கான அணுகுமுறைகளையும் கண்டு பிடித்துக்கொடுக்கும் பட்சத்தில் தான் வறுமை நிலையை ஒழிக்க முடியும்.

தமிழ்நாட்டிற்கும் பலாலிக்குமான விமான சேவை மற்றும் கடல்வழிப் பயணங்கள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால், இந்த வசதிகளைப் பயன்படுத்தி மக்கள் தமது பொருளாதாரத்தை உயர்த்த முடியும். அதேநேரம், சிறுகைத்தொழில் முயற்சிகளையும் ஆரம்பித்துக்கொடுப்பதன் மூலம், வறுமை நிலையைப் போக்க முடியும்.

மக்களின் வறுமை நிலையைப் போக்கவதற்கான வழிமுறைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பினும், தற்போதை அரசியல் சூழ்நிலை காரணமாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினேன்.

50 வருட அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்க கூடிய பொறிலியலாளர் ஒருவரை தருவதாக டொரன்டோ முதல்வர் தெரிவித்திருந்தார்.

நாட்டில் இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக ஸ்திரமான முடிவை எடுக்க முடியாத நிலை இருக்கின்றது. நாட்டின் நிலைமை மாற்றமடைந்த பின்னர், அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக கூறியிருந்தார்கள், அதனை உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தேன்.

உள்ளுராட்சி இணையங்களின் ஊடாக பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முன்வந்துள்ளனர். தற்போது வளர்ச்சியடைவுள்ள நகராக யாழ்.நகரம் இருக்கின்ற படியால், அதிகளவான வேலைத்திட்டங்களை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக வங்கியின் நிதியினூடாக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. ஒரு சில திட்டங்கள் முன்னெடுத்துள்ளார்கள். ஏனைய திட்டங்களை எதிர்வரும் ஆண்டுகளில் முன்னெடுப்பதற்கு கால வரையறை நிர்ணயித்துள்ளனர். அதனடிப்படையில் 2021 ஆம் ஆண்டு வேலைத்திட்டங்கள் நிறைவுபடுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எமது பாதாள சாக்கடை திட்டத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் தொடர்பாக கூறியிருந்தோம். எதிர்வரும் மார்ச் மாதத்தில் மீண்டும் யாழ்.மாநகரத்திற்கு வருகை தந்து, திட்டத்தை அமுல்படுத்துவதாக கூறினார்கள்.

தற்போதைய, அரசியல் நிலைமை இவ்வாறு இருக்கும் பட்சத்தில் உங்களின் பங்கு என்ன என வினவினார். ஆரசியல் குழப்பத்தை எவ்வாறு முன்னெடுக்கின்றார்கள் என நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டுமென்று அல்ல.

தவறான கருத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் மத்தியில் பலரால், அதாவது, சிங்கள எதிர் தரப்பினால் பல்வேறு பிரச்சாரங்கள் முன்வைக்கப்படுகின்றன. எமது நாட்டின் அரசியலமைப்பை மீறியதன் காரணமாகவும், நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயற்பட்டதன் காரணமாகவும், அதனை எதிர்த்துக் குரல் கொடுத்தோமே தவிர, எந்தவொரு ஆட்சியாளருக்கும் சார்பாக குரல் கொடுக்கவில்லை என்பதே உண்மை.

அதனை நாங்கள் சட்டரீதியாகவும் எமது தலைவர்கள் நிரூபித்துக் காட்டியிருக்கின்றார்கள். சட்டமும் அதன் நடைமுறையை முன்னெடுத்து வருகின்றது. சட்டத்தின் முடிவைக் கூற முடியாது. தமிழ் மக்கள் எவ்வாறான அரசியல் நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்பது பற்றி கூறியிருந்தோம்.

ஒரு ஐக்கிய இலங்கைக்குள் பிளவுபடாத இலங்கைக்குள் வடகிழக்கு இணைக்கப்பட்டு, எமது பூர்வீக இடங்களில் பெரும்பான்மை மக்கள் எவ்வாறு வாழ்கின்றார்ளோ அத்தனை கௌரவத்துடன் வாழ வேண்டும் என்பதற்கான ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்கி ஐக்கியத்துடன் வாழ வேண்டுமென்றே கேட்டிருக்கின்றோம்.

யாராவது ஆட்சிக்கு வந்தாலும், எமது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலை எமது அரசியல் ரீதியான நியாயமான முறையில் வென்றெடுப்பதே. எந்த அரசு எமக்குத் துணை புரிகின்றதோ அந்த அரசுடன் பணிபுரிந்து எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதே எமது நோக்கம் என்பதையும் அவரிடம் சுட்டிக்காட்டியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க